தெலுங்கானா பலாத்கார சம்பவம்: போலீசுக்கு நண்பர்களோ, எதிரிகளோ கிடையாது; மந்திரி பேச்சு

ஐதராபாத் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நேர்மையான விசாரணை மேற்கொள்ளும் போலீசாரை தெலுங்கானா உள்துறை மந்திரி பாராட்டி பேசியுள்ளார்.;

Update:2022-06-09 13:12 IST



ஐதராபாத்,



தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் தலைநகரான ஐதராபாத்தில் ஒரு வாரத்தில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கடந்த மே மாதம் 28ந்தேதி ஒரு தனியார் கிளப்பில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய 17 வயது சிறுமியை வீட்டில் விடுகிறோம் என கூறி 5 பேர் அழைத்து சென்று, காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 3 பேர் மைனர் சிறுவர்கள் ஆவர். மற்ற இருவர், சாதுதீன் மாலிக் மற்றும் உமர்கான் ஆவர்.

இவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் தோழமை கட்சியான ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.

இதேபோன்று தெலுங்கானா அரசில் உள்துறை மந்திரியாக உள்ள மஹ்மூத் அலி என்பவரின் பேரன் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரின் மகனுக்கு வழக்கில் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பற்றி பா.ஜ.க. எம்.பி. அரவிந்த் தர்மபுரி, ஏப்ரல் 22 முதல் வரிசையாக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பங்களை விரிவாக பட்டியலிட்டதுடன், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் மந்திரி கே.டி. ராமராவ் அமைதி காப்பது பற்றி கேள்வி எழுப்பியதுடன், அவர்கள் பாலியல் வன்கொடுமைகளை ஊக்குவிக்கின்றார்களா? என்றும் கேட்டார்.

என்ன நடக்கிறது என்று எங்களுக்கு ஒரே குழப்பம் ஆகவுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவரின் மகன் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் உள்ளார். ஆனால், ஒருவரும் அதுபற்றி பேசவில்லை.

முதல்-மந்திரி அல்லது அவரது மகன் இதுபற்றி பதிலளிக்க வேண்டும். ஒரு சின்ன விசயத்திற்கு கூட டுவிட்டரில் பதில் தெரிவிக்க ஓடி வரும் முதல்-மந்திரி 10 முதல் 15 நாட்களாக வாயை திறக்காமல் உள்ளார் என கடுமையாக பேசியுள்ளார்.

இந்நிலையில், தெலுங்கானா உள்துறை மந்திரி செய்தியாளர்களிடம் பேசும்போது, பெற்றோர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளை கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ள விரும்புகிறேன்.

அவர்கள் போக்கில் அவர்களை சுற்றி திரிய விட்டால், பின்னர் அவர்களை தடுத்து நிறுத்துவது கடினம் ஆகிவிடும். அவர்களை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்பதற்கான முயற்சிகளை வரும் நாட்களில் பார்ப்போம் என கூறியுள்ளார்.

அரசியல் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். இளைஞர்கள் கெட்டு போவதற்கு மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்களை அவர் வசைபாடினார். நடந்தவற்றுக்காக நாம் வருந்துகிறோம். இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது.

ஏனெனில் நம்முடைய நாட்டின் வருங்காலம் அவர்கள். வருகிற நாட்களில் இளைஞர்களுக்கு விருது அளிக்க முயற்சிப்போம். முறையான விசாரணை மேற்கொள்ளும் போலீசாருக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நவீன காலத்தில், மக்கள் மொபைல் போன்கள், வாட்ஸ்அப் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இளைஞர்கள் கெட்டு வருகிறார்கள் என உங்களுக்கே தெரியும். பெற்றோர்களின் பொறுப்பு இதில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்