சிக்கிம் வெள்ளம்: மேற்கு வங்காளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய 150 ரெயில்வே ஊழியர்கள்

சிக்கிம் எல்லையில் மேற்கு வங்க மாநிலத்தில் முகாமிட்டிருந்த 150 ரெயில்வே ஊழியர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அபாயத்தில் இருந்த நிலையில் நூலிழையில் அவர்கள் உயிர் தப்பினர்.

Update: 2023-10-07 17:02 GMT

 

மேகவெடிப்பு; வெள்ளம்

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லாச்சன் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் அங்குள்ள டீஸ்டா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளம் சுங்தாங் பகுதியில் உள்ள நீர்மின் திட்ட அணையை சென்றடைய, அணை உடைந்து நீர் வெளியேறியது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. பர்டாங் பகுதியில் முகாமிட்டிருந்த 22 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இவர்கள் தவிர மேலும் 100-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமாகினர்.

பலி 27 ஆக உயர்வு

மழை, வெள்ளம் காரணமாக 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,200-க்கும் அதிகமான வீடுகளும், 13 மேம்பாலங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. 6 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிக்கிம் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 8 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். 141 பேரை இன்னும் காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

150 ஊழியர்கள் உயிர் தப்பினர்

இதனிடையே வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடும், முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள அனைவருக்கும் தலா ரூ.2,000 உடனடி நிவாரணமாகவும் வழங்கப்படும் என முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார். இந்த நிலையில் சிக்கிம் எல்லையில் மேற்கு வங்க மாநிலத்தில் முகாமிட்டிருந்த 150 ரெயில்வே ஊழியர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அபாயத்தில் இருந்த நிலையில் நூலிழையில் அவர்கள் உயிர் தப்பியது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சிக்கிம்-மேற்குவங்க எல்லைக்கு அருகே ரெயில்வே சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காக 150-க்கும் ரெயில்வே ஊழியர்கள் மேற்கு வங்காளத்தின் கலிம்போங் மாவட்டத்தில் டீஸ்டா ஆற்றங்கரையோரம் உள்ள ராம்பி பஜார் பகுதியில் முகாம்களை அமைத்து தங்கியிருந்தனர்.

3 ஆயிரம் சுற்றுலா பயணிகள்

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிக்கிமில் டீஸ்டா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் புதன்கிழமை அதிகாலையில் மேற்குவங்காளத்தின் ராம்பி பஜார் பகுதிக்கு வந்த, ரெயில்வே ஊழியர்களின் முகாம்களை அடித்து சென்றது. எனினும் தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரிகள், வரவிருக்கும் பேரழிவை பற்றி அறிந்தது சரியான நேரத்தில் தொழிலாளர்களின் முகாம்களுக்கு வாகனத்தில் சென்று, தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி மீட்டு சென்றனர். அதே சமயம் தொழிலாளர்களின் உடைமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இதனிடையே சிக்கிமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மங்கன் மாவட்டத்தில் உள்ள லாச்சென் மற்றும் லாச்சுங் பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்