ஆயுதத்தால் தாக்கி தமிழக பெண் படுகொலை

பெங்களூருவில், வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி தமிழக பெண்ணை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. அவரது கணவர், போலீசில் சரண் அடைந்துள்ளார்.

Update: 2023-07-27 18:45 GMT

பெங்களூரு:-

ஓசூரை சேர்ந்தவர்

பெங்களூரு சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மூடலபாளையா அருகே சிவானந்தநகர் 4-வது கிராசில் வசித்து வருபவர் சங்கர் (வயது 43). இவரது மனைவி கீதா (33). இந்த தம்பதிக்கு 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் உள்ளனர். கீதாவின் சொந்த ஊர் தமிழ்நாடு ஓசூர் அருகே காந்திநகர் ஆகும். டிரைவரான சங்கர் வேன் ஓட்டி வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் ஓசூரில் இருந்து கீதாவின் தாய் ரத்தினம்மா தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பார்க்க சந்திரா லே-அவுட்டுக்கு வந்திருந்தார். மகளை பார்த்து பேசிவிட்டு மருமகன் சங்கரை செல்போனில் தொடர்பு கொண்டு ரத்தினம்மா பேசினார். அப்போது தான் வேலையில் இருப்பதாகவும், நீங்கள் ஊருக்கு புறப்பட்டு செல்லும்படி சங்கர் கூறி இருக்கிறார்.

மாமியாருக்கு செல்போனில் தகவல்

அதன்படி, பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு ரத்தினம்மா புறப்பட்டு சென்றுள்ளார். இரவு 11 மணியளவில் ரத்தினம்மாவை சங்கர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கீதாவை கொலை செய்து விட்டதாக சங்கர் கூறி இருக்கிறார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ரத்தினம்மா ஓசூரில் இருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் தனது மகனுடன் சந்திரா லே-அவுட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்ற அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு கீதா தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தனது மகளின் உடலை பார்த்து ரத்தினம்மா கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்ததும்

சந்திரா லே-அவுட் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கீதாவின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள்.

போலீசில் கணவர் சரண்

அப்போது கீதாவின் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி சங்கர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. கீதாவுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி சங்கர் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாகவும், இந்த விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். தனது மகள் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு கீதாவை, சங்கர் கொலை செய்திருப்பதாக சந்திரா லே-அவுட் போலீஸ் நிலையத்தில் ரத்தினம்மா புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் கீதாவை கொலை செய்த சங்கர் நேற்று சந்திரா லே-அவுட் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்