சாலை இரும்பு தடுப்பில் லாரி மோதி தமிழக டிரைவர்-கிளீனர் சாவு

பெங்களூரு அருகே சாலை இரும்பு தடுப்பில் லாரி மோதியதில் தமிழ்நாட்டை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது.

Update: 2023-06-28 18:45 GMT

பெங்களூரு:-

லாரி கவிழ்ந்து விபத்து

பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திப்பள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அத்திப்பள்ளி சர்க்கிள் ரோட்டில் நேற்று காலையில் ஒரு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலியை இடித்து தள்ளியது. பின்னர் அந்த லாரி பல்டி அடித்து கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளீனர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அத்திப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு விசாரித்தனர். மேலும் தகவல் அறிந்ததும் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுனாவும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்

அப்போது விபத்திற்கு உள்ளான கன்டெய்னர் லாரி மில்கி மிஸ்ட் நிறுவனத்திற்கு சேர்ந்ததும் என்றும், பொம்மசந்திராவில் இருந்து ஒசக்கோட்டைக்கு பால் பொருட்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றதும் தெரியவந்தது.

அந்த லாரியை ஓட்டிச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர்களான டிரைவர் கார்த்திக் மற்றும் கிளீனர் உதய் ஆகியோர் பலியானதும் தெரியவந்தது.. தடுப்பு வேலியில் லாரி மோதி கவிழ்ந்த போது இரும்பு கம்பிகள் குத்தியதால் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து பாதிப்பு

லாரியை டிரைவர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டிச் சென்றதால், அவரது கட்டுப்பாட்டை மீறி விபத்து நடந்திருக்கலாம் என்று அத்திப்பள்ளி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அத்திப்பள்ளி சர்க்கிள், அதை சுற்றியுள்ள சாலைகளில் நேற்று அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். பின்னர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்