சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேச்சு; கர்நாடக முன்னாள் பா.ஜ.க. மந்திரி மீது எப்.ஐ.ஆர். பதிவு

திப்பு சுல்தானை போல் சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேசியதற்காக கர்நாடக முன்னாள் பா.ஜ.க. மந்திரி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-05-25 05:03 GMT



பெங்களூரு,


கர்நாடக பா.ஜ.க. முன்னாள் மந்திரி அஸ்வத் நாராயண் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த பொதுகூட்டத்தில் மக்களிடம் பேசும்போது, 17-ம் நூற்றாண்டில் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானை ஒக்கலிக சமூக தலைவர்களான உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா ஆகிய இருவர் கொலை செய்தது போன்று சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேசினார்.

எனினும், அந்த இருவரும் கற்பனையான நபர்கள் என காங்கிரஸ் கூறி வந்தது. இதன்பின்னர், பா.ஜ.க. முன்னாள் மந்திரி அஸ்வத் தனது டுவிட்டரில் கூறும்போது, எனது நிலைப்பாட்டை தெளிவாக்குகிறேன்.

திப்பு சுல்தானையும், சித்தராமையாவையும் மாண்டியாவில் ஒப்பிட்டது தீங்கான அர்த்தத்தில் இல்லை. எனது வார்த்தைகள் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளன. அது யாரையும் புண்படுத்துவதற்கானவை அல்ல என தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியை ஒரு பெரிய கொலைகாரர் என கூறுவது, முதல்-மந்திரியை தாக்கி பேசுவது என்பது சித்தராமையாவின் கலாசாரத்தில் ஒன்றாக இருக்கலாம் என அஸ்வத் டுவிட்டரில் பதிவிட்டார்.

காங்கிரசை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற உண்மையை கூறவே அப்படி குறிப்பிட்டேன் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதிலாக சித்தராமையா, மகாத்மா காந்தியை கொலை செய்தவரை வழிபடும் கட்சியின் தலைவர்களிடம் இருந்து அன்பு மற்றும் நட்புணர்வை எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரியில் அஸ்வத் மீது புகார் அளிக்கப்பட்டது. எனினும், புகார் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்திய தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்து சித்தராமையா முதல்-மந்திரியாகி உள்ளார்.

இதனை தொடர்ந்து, திப்பு சுல்தானை போல் சித்தராமையாவை முடித்து விடுங்கள் என பேசியதற்காக கர்நாடக முன்னாள் பா.ஜ.க. மந்திரி மீது எப்.ஐ.ஆர். ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்