மக்களிடம் இருந்து பணத்தை எடுப்பது பா.ஜனதா மாடல்; சட்டசபையில் முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொள்வது பா.ஜனதா மாடல் என்று சட்டசபையில் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Update: 2023-07-20 21:34 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பல்வேறு உறுப்பினர்கள் பேசினர். இந்த விவாதத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூக சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தால் என்ன பயன் என்று அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். நாங்கள் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். உத்தரவாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். 5 திட்டங்களில் 4 திட்டங்களை அமல்படுத்திவிட்டோம். நாங்கள் சொன்னதை நிறைவேற்றியுள்ளோம்.

ஆனால் பா.ஜனதாவினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் மக்கள் அக்கட்சியை தோற்கடித்தனர். கர்நாடக காங்கிரஸ் அரசின் வளர்ச்சி மாடலால் பா.ஜனதாவினர் அச்சம் அடைந்துள்ளனர். உழைக்கும் மக்களின் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டும். அதை நாங்கள் செய்கிறோம். ஆனால் மக்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வது பா.ஜனதா மாடல்.

உத்தரவாத திட்டங்களால் கர்நாடகத்தில் ஒரு குடும்பத்தால் மாதம் ரூ.8 ஆயிரம் வரை சேமிக்க முடியும். தினமும் மக்கள் எங்களின் திட்டங்களின் பயனை பெறுகிறார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. அந்த வயிற்றெரிச்சல் அவர்களை சுடுகிறது. பா.ஜனதாவினர் பிரதமர் மோடி குறித்து அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் அவரால் ஒரு எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை.

வெறும் பேச்சால் நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. இதுகுறித்த பாடத்தை மோடிக்கு கர்நாடக மக்கள் புகட்டியுள்ளனர். தலித் சமூகத்தை சேர்ந்த துணை சபாநாயகரிடம் பா.ஜனதாவினர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். ஒருவேளை சபை காவலர்கள் இல்லாமல் இருந்திருந்தால் அவரின் நிலை என்னவாகி இருக்கும். அவர் மீது தாக்குதல் நடந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. பா.ஜனதாவினரின் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

15-வது நிதி ஆணையம் கர்நாடகத்திற்கு ரூ.5 ஆயிரத்து 495 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால் அந்த நிதியை நமக்கு மத்திய அரசு வழங்கவில்லை. இது கர்நாடகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். இதுகுறித்து கர்நாடகத்தை பா.ஜனதா தலைவர்கள், அக்கட்சியின் எம்.பி.க்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. மோடியை பார்த்தால் அவர்களுக்கு குளிர் காய்ச்சல் வந்துவிடுகிறது.

பிரதமர் மோடி கர்நாடகத்தில் தீவிரமாக பிரசாரம் செய்தார். ஆனால் அவர் பிரசாரம் மேற்கொண்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரசின் வாக்கு வங்கி அதிகரித்து வந்துள்ளது. ஆனால் பா.ஜனதாவின் வாக்கு வங்கி அதிகரிக்கவில்லை.

பா.ஜனதாவினர் ஜனநாயக விரோதிகள், அரசியல் சாசன விரோதிகள். 10 கிலோ அரிசியில் கால் கிலோ குறைந்தாலும் போராட்டம் நடத்துவோம் என்று எடியூரப்பா கூறினார். உங்கள் ஆட்சி காலத்தில் 7 கிலோ வழங்கிய அரிசியை 5 கிலோவாக குறைத்தது ஏன்?. உத்தரவாத திட்டங்களால் அரசு திவாலாகும் என்று பிரதமர் மோடி கூறினார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் கடன் ரூ.53 லட்சம் கோடி, தற்போது நாட்டின் கடன் ரூ.170 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டை திவாலாக்கியது யார்?.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்