100 நம்ம கிளினிக்குகள் அடுத்த வாரம் திறக்கப்படும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்
பெங்களூருவில் 100 நம்ம கிளினிக்குகள் அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.;
பெங்களூரு:
பெங்களூருவில் 100 நம்ம கிளினிக்குகள் அடுத்த வாரம் திறக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
438 நம்ம கிளினிக்குகள்
ஆரோக்கிய சிட்டி என்ற பெயரில் பெங்களூருவில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் நகர பகுதிகளில் 438 நம்ம கிளினிக்குகள் அதாவது மருத்துவ மையங்களை திறக்க முடிவு செய்துள்ளோம். தொற்று அல்லாத நோய்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரங்களில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் இருப்பவர்களை மனதில் வைத்து இந்த மருத்துவ மையங்கள் திறக்கப்படுகின்றன.
நீரிழிவு நோய்
நம்ம கிளினிக்குகளில் மக்களின் உடல் நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். நீரிழிவு நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு சரியான சிகிச்சை கிடைப்பது இல்லை. அதனால் மாநிலத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாயமாக நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
மாநிலத்தில் ஏற்கனவே 6,500 சுகாதார நல மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த மையங்கள் மூலமும் நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும். 200 நம்ம கிளினிக்குகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை முடித்துள்ளோம். அதில் 100 கிளினிக்குகள் பெங்களூருவில் அமைக்கப்படுகிறது.
மருத்துவ பரிசோதனை
பெங்களூருவில் நம்ம கிளினிக்குகள் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்பட உள்ளது. பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அடுத்த 18 மாதங்களில் கர்நாடகத்தில் உள்ள அனைவருக்கும் உடல் மருத்துவ பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
மத்திய அரசு தொலைதூர மனநல சுகாதார மையத்தை தொடங்கியுள்ளது. புற்றுநோய் பாதிப்பு இருப்பது மக்களுக்கு தெரிவது இல்லை. கித்வாய் ஆஸ்பத்திரி மூலம் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
துரித உணவு
கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. முன்பு ஆயுட்காலம் 40 வயது முதல் 52 வயது வரை இருந்தது. அது தற்போது 65 வயது முதல் 67 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தொற்று நோயை விட தொற்று அல்லாத நோய்கள் தான் நமக்கு சவாலாக திகழ்கின்றன. இந்தியாவில் நீரிழிவு நோய் அதிக மக்களை பாதிப்படைய செய்கிறது. குழந்தைகள் துரித உணவை அதிகமாக சாப்பிடுகிறார்கள். கர்நாடகத்தில் 850 நர்சிங் கல்லூரிகள் உள்ளன. ஆனால் அந்த கல்லூரிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும்.
இவ்வாறு சுதாகர் பேசினார்.