நடத்தையில் சந்தேகம்: கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன்

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பெண்ணின் கழுத்தை நெரித்து, மாடியில் இருந்து கள்ளக்காதலன் கீழே தள்ளிவிட்டார்.;

Update:2024-04-18 11:23 IST

புதுடெல்லி,

டெல்லி துவாரகா பகுதியில் 30 வயது பெண் ஒருவர் தன் 10 மற்றும் 8 வயது மகன்களுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய கணவர் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூரில் தங்கி விடுவார். இந்த நிலையில் இவருக்கும், உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த 28 வயதான சஞ்சய்சிங் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது திருமணம் தாண்டிய கள்ள உறவுக்கும் வழி வகுத்தது.

இதன்பேரில் சஞ்சய்சிங் அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினரிடம் தன்னையே அந்த பெண்ணின் கணவராக காட்டிக்கொண்டுள்ளார். அந்த பெண்ணின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே இரவில் அவர் வீட்டுக்கு வந்தபோது, அந்த பெண் வேறு யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது.

அப்போது சஞ்சய்சிங் ஆத்திரத்தில் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து, மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்ததில் அந்த பெண் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் 10 வயது மகனை எழுப்பி, தாயார் கீழே தவறி விழுந்து விட்டதாக சொல்லி, துணியை எடுத்து ரத்தத்தை துடைக்குமாறு கூறியுள்ளார். சிறுவனும் அப்பாவியாய் ரத்தத்தை துடைத்து அந்த துணியை தெருவில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுள்ளான்.

இதற்கிடையே கீழே அக்கம்பக்கத்தினர், மாடிப்படி அருகே பெண் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி மேற்கண்ட விவரங்களை கண்டறிந்தனர். பின்னர் சஞ்சய் சிங்கை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்