இ.எஸ்.ஐ. பணம் முறைகேடு வழக்கு: நடிகை ஜெயப்பிரதா சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு

இ.எஸ்.ஐ. பணம் முறைகேடு வழக்கில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.

Update: 2024-03-18 20:31 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பிரபல நடிகை ஜெயப்பிரதா, அவருடைய சகோதரர்கள் ராம்குமார், ராஜ்பாபு ஆகியோர் ஜெயப்பிரதா சினி தியேட்டரின் பங்குதாரர்கள் ஆவர். இந்த தியேட்டர், 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது.

தியேட்டர் ஊழியர்கள் பெயரில் இ.எஸ்.ஐ.யில் செலுத்துவதற்காக அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு இருந்தது ஆனால், அந்த தொகை, இ.எஸ்.ஐ. கழகத்தில் செலுத்தப்படவில்லை.

ரூ.37 லட்சத்து 68 ஆயிரம் பாக்கி ஏற்பட்டது. இதுதொடர்பாக இ.எஸ்.ஐ. கமிஷனர் சென்னை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில், ஜெயப்பிரதாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆகஸ்டு மாதம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்தார். ஆனால் அதை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர், நடிகை ஜெயப்பிரதா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஜெயப்பிரதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சோனியா மாத்தூர், இ.எஸ்.ஐ. கழகத்தில் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரித்து முடிக்கப்படும்வரை ஜெயப்பிரதாவின் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டனர். மேல்முறையீட்டு மனு விசாரித்து முடிக்கப்படும்வரை இடைக்கால ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்