தேச துரோக சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேச துரோக சட்டத்துக்கு எதிரான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Update: 2023-09-12 20:59 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்த போது 1860-ம் ஆண்டில் இந்திய தண்டனை சட்டத்தை உருவாக்கினர். அப்போது இந்தியர்களை அடக்கி ஆளும் விதமாக '124ஏ' எனும் சட்டப்பிரிவை இந்திய தண்டனை சட்டத்தில் சேர்த்தனர்.

அதன்படி, அரசுக்கு எதிராக கூறப்படும் கருத்துகளுக்காகவும், அரசாங்கத்தை மாற்றக்கோரும் கோரிக்கைகளுக்கும் 'தேச துரோகம்' என குற்றம் சாட்டப்பட்டு குற்ற வழக்கு பதிவு செய்ய வழிவகை உருவானது. இதன் மூலம் பலர் சிறை தண்டனைக்கு உள்ளாகினர்.

ரத்து செய்யக்கோரி வழக்கு

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள '124ஏ' பிரிவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. மேலும் இந்த சட்டப்பிரிவில் புதிதாக எந்த வழக்கையும் மாநில மற்றும் மத்திய அரசுகள் பதிவு செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதனிடையே இந்த வழக்குகள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் இந்திய தண்டனை சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு மறுத்து விட்டது.

5 நீதிபதிகள் அமர்வு

அப்போது நீதிபதிகள், 'இந்த வழக்கில் பல அம்சங்கள் விசாரிக்கப்பட வேண்டி உள்ளதால், இதனை குறைந்தது 5 நீதிபதிகளையோ அல்லது 7 நீதிபதிகளையோ கொண்ட ஒரு அரசியல் அமைப்பு அமர்வு விசாரிக்க வேண்டும்' என கூறி உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்