தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர் நியமனத்தில் புதிய வழிமுறை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் புதிய வழிமுறையை வகுத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.;

Update:2023-03-03 04:15 IST

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

நமது நாட்டில் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் மத்திய மந்திரிசபையின் ஆலோசனை, வழிகாட்டுதல்பேரில் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்கள்.இந்த நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படுகிற கொலீஜியம் (மூத்த நீதிபதிகள் குழு) போன்று, ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.

இந்த வழக்குகளை மூத்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிகுமார் ஆகியோரை கொண்ட 5 பேர் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.விசாரணை முடிந்து கடந்த நவம்பர் 24-ந் தேதியன்று, தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

தீர்ப்பு

இந்த தீர்ப்பு நேற்று வெளியானது. தீர்ப்பில், தலைமை தேர்தல் கமிஷனரையும், தேர்தல் கமிஷனர்களையும் பிரதமர், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகிய 3 பேரைக்கொண்ட குழுவின் ஆலோசனை பேரில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இதில் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றுகிற வரையில் இந்த முறை நீடிக்கும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் இல்லை என்றால்....

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-

* நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்றால், எதிர்க்கட்சிகளில் தனிப்பெரும் கட்சியின் தலைவர், தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் தேர்வுக்குழுவில் இடம் பெற வேண்டும்.

* ஜனநாயக நாட்டில் தேர்தல் சந்தேகத்திற்கு இடமின்றி நியாயமானதாக இருக்க வேண்டும். அதன் தூய்மை பேணப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு தேர்தல் கமிஷன்வசம் இருக்க வேண்டும்.

* ஜனநாயகத்தில் தேர்தலில் தூய்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும். அப்படி இல்லா விட்டால், அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

* தேர்தல் கமிஷன் அரசியல் சாசன கட்டமைப்புக்கும், சட்டத்துக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும். அது நேர்மையற்ற முறையில் செயல்பட முடியாது.

* தனது செயல்பாட்டில் சுதந்திரமான, நியாயமான பங்களிப்பை தேர்தல் கமிஷன் உறுதி செய்யாவிட்டால், ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்கும் சட்டத்தின் ஆட்சியின் முறிவுக்கு அது உத்தரவாதம் அளிப்பதாக அமைந்து விடும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒருமித்த தீர்ப்பு

5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்தினை கொண்டுள்ள தீர்ப்பு இது. இந்தத் தீர்ப்பை நீதிபதி கே.எம்.ஜோசப் எழுதி வழங்கியுள்ள போதும், தன் தரப்பு கருத்துக்களுடன் நீதிபதி அஜய் ரஸ்தோகி தனியாக ஒரு தீர்ப்பினை எழுதி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்