தாஜ் மகாலை சுற்றி 500 மீ பரப்பளவில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு தடை

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை சுற்றி 500 மீட்டர் பரப்பளவில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-09-27 07:31 GMT



புதுடெல்லி,


முகலாய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசரான ஷா ஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக 1631-ம் ஆண்டு தாஜ் மகாலை எழுப்பினார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில், முழுவதும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இன்றளவும் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.

உலக அதிசயங்களில் ஒன்று, காதல் சின்னம் என பல பரிமாணங்களை கொண்ட, தாஜ் மகாலில் இருந்து 500 மீட்டர் பரப்பளவுக்கு தள்ளி கடைகளை அமைத்திருக்கும் உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், சுப்ரீம் கோர்ட்டின் முந்தின தீர்ப்புக்கு எதிராக, அதனை மீறும் வகையில் தாஜ் மகாலை சுற்றிய பகுதிகளில் சட்டவிரோத வர்த்தகங்கள் நடைபெறுகின்றன என சுட்டப்பட்டு இருந்தது.

இந்த பகுதியில், எந்தவித கட்டுமான பணிகளுக்கும் அனுமதி இல்லை. வாகன போக்குவரத்துக்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. நினைவு சின்னத்திற்கும், அதனை சுற்றியுள்ள பகுதிக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், அருகே மரக்கட்டைகளை எரிக்கவும் தடை, நகராட்சியின் திட மற்றும் வேளாண் கழிவுகளை கொட்டவும் முழு பகுதியிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அந்த நடவடிக்கைகள் எல்லாவற்றையும் நிறுத்தும்படியான நடவடிக்கைகளை எடுக்க ஆக்ரா வளர்ச்சி கழகத்திற்கு உத்தரவிடும்படி மனுவில் கேட்டு கொள்ளப்பட்டு இருந்தது.

இதனை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஏ.எஸ். ஓகா ஆகியோர் தலைமையிலான அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட உத்தரவில், இந்திய அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி, தாஜ் மகாலின் வெளிச்சுவர் மற்றும் எல்லை பகுதியில் இருந்து 500 மீட்டர் பரப்பளவில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் நீக்க ஆக்ரா வளர்ச்சி கழகத்திற்கு உத்தரவிடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்