ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.;

Update:2024-02-02 11:04 IST

டெல்லி,

ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஹேமந்த் சோரனிடம் நேற்று முன் தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பலமணி நேரம் நடந்த விசாரணைக்கு பின் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அமலாக்கத்துறை கைது செய்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு முதல்-மந்திரி பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.

அதேவேளை, கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. ஆனால், ஹேமந்த் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் உத்தியை மாற்றி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற்று சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

மேலும், அமலாக்கத்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கையை எதிர்த்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் முறையீடு செய்ய அறிவுறுத்திய சுப்ரீம் கோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால், ஹேமந்த் சோரனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்