'எங்கள் உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்காதீர்கள்' - குஜராத் ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்

குஜராத் ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-08-21 08:08 GMT

டெல்லி,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ம் தேதி குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை 8ம் தேதி விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு, கருவின் வளர்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவக்குழு அமைத்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை, கரு வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த மருத்துவக்குழு கடந்த 10ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த வழக்கை 11ம் தேதி மீண்டும் விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு வழக்கை 12 நாட்களுக்கு தள்ளி வைத்தது. ஆனால், கடந்த 17ம் தேதி இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக ஐகோர்ட்டு இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், கரு 28வது வாரத்தை நெருங்குவதாகவும், காரணமின்றி ஐகோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனு மீது முடிவெடுக்க ஐகோர்ட்டு காலதாமதம் செய்வதாகவும், மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்பட்டுவிட்டதாகவும் குஜராத் ஐகோர்ட்டு மீது சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியது. மேலும், வழக்கை திங்கட்கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் இந்த வழக்கில் குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கை கடந்த சனிக்கிழமை விசாரித்த குஜராத் ஐகோர்ட்டு கருவை கலைக்க தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், குஜராத் ஐகோர்ட்டை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கருவை கலைக்கவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் சனிக்கிழமை குஜராத் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகரத்னா, ஜிஜல் புயன் அமர்வு கூறுகையில், குஜராத் ஐகோர்ட்டில் என்ன நடக்கிறது? சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக இந்தியாவில் உள்ள எந்த கோர்ட்டும் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. இது அரசியலமைப்பு தத்துவத்திற்கு எதிரானது' என்று குஜராத் ஐகோர்ட்டு உத்தரவை கடுமையாக சாடினர்.

அப்போது, குஜராத் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேதா, குஜராத் ஐகோர்ட்டு உத்தரவில் எழுத்துப்பிழை ஏற்பட்டதாகவும், அது கடந்த சனிக்கிழமை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், அது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் வாதிட்டார். உத்தரவை திரும்பப்பெறும்படி மாநில அரசு சார்பில் ஐகோர்ட்டு நீதிபதியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும்' தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்