கர்நாடகத்தில் பரபரப்பு: மல்லிகார்ஜுன கார்கே முதல்-மந்திரி ஆக ஆதரவு - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே முதல்-மந்திரி ஆக ஆதரவு உண்டு என்று டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். இது கர்நாடக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
பெங்களூரு:
முதல்-மந்திரி வாய்ப்பு
ஒவ்வொரு முறையும் கர்நாடக சட்டசபை தேர்தல் வரும்போது, காங்கிரசில் தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று குரல் எழுவது வழக்கமாகிவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலின்போது, தலித் சமூகத்தை சேர்ந்த மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஸ்வர், முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர்.
முதல்-மந்திரி ஆவதற்கான வாய்ப்பும் அவருக்கு இருந்தது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தை பெற்றாலும், கட்சி தலைவர் பரமேஸ்வர் தான் போட்டியிட்ட துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பு பறிபோனது. சித்தராமையா முதல்-மந்திரியாக போட்டி இல்லாத நிலை ஏற்பட்டது. ஆயினும் சட்டசபை தேர்தல் களத்தில் போட்டியிடாத மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று குரல் எழுந்தது.
ரகசிய வாக்கெடுப்பு
இதையடுத்து முதல்-மந்திரி பதவிக்கு அவர் போட்டியிட்டார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் கருத்து கேட்டு அறியப்பட்டது. அதில் சித்தராமையாவுக்கு அதிக வாக்குகள் விழுந்ததால், சித்தராமையா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டார். கட்சியின் மிக மூத்த தலைவராக இருந்தும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி ஆகும் வாய்ப்பு கடைசி நேரத்தில் கை நழுவி போனது உண்டு. அதாவது, 1999, 2004, 2013-ம் ஆண்டுகளில் மூன்று முறை அவருக்கு வந்த முதல்-மந்திரி வாய்ப்பு நழுவி போனது.
ஆனாலும் அவர் எங்கும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது இல்லை. கட்சிக்கு விசுவாசமாக இருந்தார். இதனால் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டதாக அவ்வப்போது கட்சிக்குள் சிலர் பேசுவது உண்டு. தற்போது கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இங்கு முதல்-மந்திரி பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
அவரது விருப்பம்
ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்றால், அவர்களின் இருவரில் மூத்த தலைவராக உள்ள சித்தராமையாவுக்கே முதல்-மந்திரி ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். இந்த நிலையில் டி.கே.சிவக்குமார், தாமாக முன்வந்து முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் மல்லிகார்ஜுன கார்கேவையும் இழுத்து வந்துவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மல்லிகார்ஜுன கார்கே எங்களின் மூத்த தலைவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர். முதல்-மந்திரி பதவி வேண்டும் என்று அவர் கேட்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் அவரது விருப்பம். முதல்-மந்திரி பதவி விஷயத்தில் கடந்த காலங்களில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கட்சிக்குள் சில தலைவர்கள் கூறுகிறார்கள்.
பணியாற்ற விரும்புவேன்
கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அதை நான், சித்தராமையா உள்பட அனைவரும் பின்பற்ற வேண்டும். கட்சியின் உச்ச பதவியில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளார். யார் முதல்-மந்திரி என்ற விவகாரத்தை கட்சி மேலிடத்திடமே விட்டு விடுகிறேன். கட்சி தான் முக்கியம். அவா் எனது தலைவர். ஒருவேளை மல்லிகார்ஜுன கார்கே முதல்-மந்திரி ஆனால் அவருக்கு கீழ் பணியாற்ற நான் விரும்புவேன். அவர் கர்நாடகத்திற்கும், தேசத்திற்கும் சொத்து.
கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவேன். அவர் என்னை விட 20 வயது மூத்தவர். நான் அவரது விருப்பத்திற்கு உட்பட்டவன். கட்சி தலைவராக உள்ள அவரை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றால், அது சரியான மனிதத்துவம் உள்ளதாக இருக்குமா?. காங்கிரசுக்கு ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் முக்கியம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
பல்வேறு வேலைகள்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே மாநில அரசியலுக்கு திரும்பும் வாய்ப்பு மிக குறைவு. அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. காங்கிரசை வெற்றி பெற வைப்பதில் அவரது பங்கு அதிகமாக உள்ளது. கூட்டணி அமைப்பது, அந்த தேர்தலுக்கு தயாராவது என்று பல்வேறு வேலைகள் அவருக்கு உள்ளன" என்றார்.
சித்தராமையா முதல்-மந்திரி பதவிக்கு வருவதை தடுக்கும் நோக்கத்தில், கார்கே முதல்-மந்திரி ஆக டி.கே.சிவக்குமார் ஆதரவு தெரிவித்து கருத்து கூறியுள்ளதாக அரசியல் விமா்சகர்கள் கூறுகிறார்கள். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.