ஒசக்கோட்டையில், மருத்துவ மாணவி தற்கொலை: பேராசிரியரின் ஆசைக்கு இணங்காததால் கொல்லப்பட்டாரா? - போலீஸ் விசாரணை

ஒசக்கோட்டையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி, கல்லூரி பேராசிரியரின் ஆசைக்கு இணங்காததால் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2023-06-06 19:51 GMT

கோலார் தங்கவயல்:

ஒசக்கோட்டையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி, கல்லூரி பேராசிரியரின் ஆசைக்கு இணங்காததால் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மருத்துவ மாணவி

பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் தர்ஷினி(வயது 24). தந்தையை இழந்த இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் டாக்டருக்கு படித்து வந்தார். முதலாம் ஆண்டு சேர்ந்து 7 மாதங்கள் ஆகி உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்ஷினி ஒசக்கோட்டை அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து பெங்களூரு புறநகர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தர்ஷினியின் தங்கை காவ்யா நேற்று ஒசக்கோட்டை புறநகர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

ஆசைக்கு இணங்காததால்...

அதில், 'எனது அக்கா தர்ஷினி மருத்துக்கல்லூரியில் சேர்ந்து 7 மாதங்கள் ஆகின்றன. இந்த நிலையில் எனது அக்காவுக்கு கல்லூரி விடுதியில் சரிவர சாப்பாடு கொடுக்கப்படவில்லை. 24 மணி நேரமும் அவருக்கு பல்வேறு வேலைகளை கொடுத்து தொல்லை கொடுத்துள்ளனர். அத்துடன் ரூ.50 லட்சத்தை உடனே செலுத்தவேண்டும், அதிலும் குறிப்பாக தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கல்லூரி பேராசிரியர் ஒருவர் கட்டாயப்படுத்தி மிரட்டி உள்ளார்.

ஆசைக்கு இணங்காததால் எனது அக்காவை பாலியல் பலாத்காரம் செய்து அந்த பேராசிரியர் கிணற்றில் வீசி கொன்றிருக்க வாய்ப்புள்ளது. அந்த பேராசிரியரின் செயலுக்கு கல்லூரி நிர்வாகமும் உடந்தையாக இருந்து வருகிறது. இதனால் கல்லூரி நிர்வாகம் மற்றும் அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்