ஹிண்டன்பர்க் காங்கிரசுடன் இணைந்து நாட்டை இழிவுபடுத்தி உள்ளது - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் கருவிதான் ஹிண்டன்பர்க் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடந்த கைத்தறி கண்காட்சியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் ஜெய்ராம் ரமேசை மந்திரி கிரிராஜ் சிங் கடுமையாக சாடினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நாட்டை இழிவுபடுத்தும் கும்பல். ஹிண்டன்பர்க் நிறுவனமும் இந்தியாவை இழிவுபடுத்துகிறது. நாட்டை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம். அவர்கள் நாட்டின் எதிரிகள். ஹிண்டன்பர்க் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிறுவனத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் கருவிதான், ஹிண்டன்பர்க். ராகுல்காந்தி போன்றவர்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.
ராகுல்காந்தி வெளிநாட்டுக்கு செல்லும்போது நாட்டை இழிவுபடுத்துகிறார். இந்தியாவில் இருக்கும்போது நாட்டு மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறார். அவரை போன்றவர்களிடம் நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழப்பம் ஏற்படுத்துவது தேசவிரோதிகளின் வேலை. தேசபக்தி உள்ள யாரும் அப்படி செய்ய மாட்டார்கள். ராகுல்காந்திக்கு நாட்டை பற்றி எதுவும் தெரியாது. நாட்டின் இலக்கு பற்றியும் தெரியாது" என்று மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.