15 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்; விவசாயி கவலை

சிந்தாமணி தாலுகாவில் கொட்டகைக்குள் புகுந்து 15 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றன. இதனால் விவசாயி கவலை அடைந்துள்ளார்.

Update: 2023-08-21 21:39 GMT

சிந்தாமணி:

சிந்தாமணி தாலுகாவில் கொட்டகைக்குள் புகுந்து 15 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றன. இதனால் விவசாயி கவலை அடைந்துள்ளார்.

விவசாயி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா அம்பாச்சி துர்கா வருவாய் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகமத்புரா கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை தனக்கு சொந்தமான கொட்டகைக்குள் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்தார். இந்த நிலையில் நள்ளிரவில் ஆடுகள் அலறுவதை கேட்டு நாராயணசாமி வெளியே வந்து பார்த்தார். அப்போது 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை கடித்து வேட்டையாடி கொண்டிருந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாராயணசாமி வீட்டுக்குள் சென்று உருட்டுக்கட்டையை கொண்டு வந்து தெருநாய்களை விரட்டி அடித்தார். அதற்குள் கொட்டைகைக்குள் புகுந்திருந்த தெருநாய்கள் 15 ஆடுகளை கடித்து வேட்டையாடி கொன்றிருந்தது. இதனால் அவர் கவலை அடைந்தார்.

தெருநாய்கள்

நேற்று காலையில் இதுபற்றி தகவல் அறிந்த அம்பாச்சி துர்கா பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஆனந்த், தாலுகா பஞ்சாயத்து அதிகாரி மஞ்சுநாத், கால்நடை டாக்டர் சலபதி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் இறந்த ஆடுகளுக்கு இழப்பீட்டு தொகை கொடுப்பதாகவும், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.

இதற்கிடையே கிராம மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். மேலும், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அவைகள் கால்நடைகளை மட்டுமல்லாமல், மனிதர்களையும் கடிப்பதாகவும் புகார் கூறினர். மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்த சிந்தாமணி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களை சமாதானம் செய்தனர். மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். அதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்