காஷ்மீரின் முக்கிய நகரங்கள் உள்பட 8 இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர், குல்காம் நகரங்கள் உள்பட 8 வெவ்வேறு இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
ஜம்மு,
காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது, ஆயுத உதவி செய்வது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களுக்கு எதிராக அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
எனினும், இதுபோன்ற விசயங்களை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய புலனாய்வு முகமை, காஷ்மீரின் குல்காம், புல்வாமா, அனந்தநாக் மற்றும் சோபியான் ஆகிய மாவட்டங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
இதேபோன்று, பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிக்கும் விவகாரத்தில், ஹுரியத் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான காஜி யாசீர் மற்றும் காஷ்மீர் இயக்க தலைவர் ஜாபர் பட் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்க துறையினரும் சோதனையில் ஈடுபட்டனர்.
காஷ்மீரில் இணையவெளியை பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டம், சிறுபான்மையினர், பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது ஆகிய வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில், காஷ்மீரின் முக்கிய நகரங்களில் மாநில புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, அனந்தநாக், குல்காம், சோபியான் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
தெற்கு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவரான மவுலவி சர்ஜன் என்பவருக்கு சட்டவிரோத வகையில் நிதி செல்லும் வழிகளை பற்றி ஆராய இன்று காலை முதல் 8 வெவ்வேறு இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு ஆயிரக்கணக்கானோரை தெருக்களில் போராட்டம் நடத்தும்படி, மக்களை வன்முறையை நோக்கி தூண்டி விட்ட வகையில், பிரபலம் அடைந்தவர் மவுலவி என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.