ஒரு பெண் கவர்னருக்கு எப்படி பாரபட்சம் காட்டினர் என மாநில வரலாறு பேசும்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அரசின் கீழ் கவர்னரின் அலுவலகம் அவமதிக்கப்பட்டு உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்து உள்ளார்.

Update: 2022-09-08 09:32 GMT

ஐதரபாத்,



தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுனர் மாளிகையில், தெலுங்கானா மக்களுக்கான சேவையில் 4-வது ஆண்டு தொடக்கம் என்ற தலைப்பில் இன்று பேசினார். அவர் பேசும்போது, தேசிய கொடியை ஏற்ற கவர்னருக்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மையில் மனவேதனை அடைய செய்தது.

கவர்னர் உரை மற்றும் நாட்டின் மூவர்ண கொடியை குடியரசு தினத்தன்று ஏற்ற எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கூட, நான் செல்லும் இடங்களில் எல்லாம் அரசின் மரபுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.

ஒரு பெண் கவர்னரை எப்படி பாரபட்சமுடன் நடத்தினர் என்று மாநிலத்தின் வரலாறு பேசும். கவர்னர் பதவி மதிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், தென்மண்டல கூட்டத்தில் நான் பங்கேற்றபோது, 75 சதவீத விவகாரங்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருந்து வந்தன. அனைத்து முதல்-மந்திரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆனால், முதல்-மந்திரி (சந்திரசேகர ராவ்) கலந்து கொள்ளவில்லை. ஏன்? மத்திய உள்துறை மந்திரி, விவகாரங்களை தீர்க்க வந்துள்ளபோது, அந்த வாய்ப்பை ஏன் நீங்கள் பயன்படுத்தவில்லை. உங்களுக்கு என்ன பிரச்சனை? அதனாலேயே, மத்திய அரசுடன் ஒரு நல்ல உறவை கொண்டிருக்க வேண்டும் என உங்களுக்கு கூறப்படுகிறது என பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், அரசு மருத்துவமனைகளின் நிலைமை படுமோசம் என குறிப்பிட்டார். அரசு மருத்துவமனையின் இயக்குனர், அரசியல்வாதிகள் கூட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்கின்றனர்.

அவரவர் வேலையை சரியாக செய்து விட்டால், ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியையும் அணுக முடியும் என்றால், பின்னர் பொதுமக்கள் ஏன் பிரச்சனைகளை தீர்க்க என்னை தேடி வரப்போகிறார்கள்? என்றும் அவர் பேசியுள்ளார்.

நான் மாவட்டங்களுக்கு செல்லும்போது, போலீஸ் சூப்பிரெண்டுகள், கலெக்டர்கள் வருவதில்லை. மரபுமுறை பின்பற்றப்படுவதுமில்லை. யாரிடம் இருந்து அவர்கள் அறிவுறுத்தல்களை பெறுகிறார்கள் என எனக்கு தெரியவில்லை.

அவர்கள் வரவில்லை என்றால், அதற்காக நான் கவலைப்பட போவதில்லை என்றும் அவர் வேதனையுடன் பேசியுள்ளார். தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அரசின் கீழ் கவர்னரின் அலுவலகம் அவமதிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்