பி.ஆர்.எஸ் வேண்டாம்.. கட்சிக்கு பழைய பெயரே இருக்கட்டும்: சந்திரசேகர் ராவுக்கு கட்சியினர் கோரிக்கை
கட்சியின் பெயரில் இருந்து தெலுங்கானாவை நீக்கியது மாநிலத்துடன் இருந்த உறவை துண்டித்தது போன்று இருப்பதாக பல கட்சியினர் தெரிவித்துள்ளனர்.;
ஐதராபாத்,
கடந்த 2022-ம் ஆண்டு சந்திரசேகர் ராவ் தனது கட்சியின் பெயரான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) என்ற பெயரை பாரத ராஷ்டிர சமிதி என மாற்றி அமைத்தார். ஆனால் சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி தோல்வியை தழுவியது. இதனால் கட்சியின் பெயரை பழைய பெயரான தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என மாற்ற பாரத ராஷ்டிர சமிதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னாள் முதல்-மந்திரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்சியின் பெயரில் இருந்து தெலுங்கானாவை நீக்கியது மாநிலத்துடன் இருந்த உறவை துண்டித்தது போன்று இருப்பதாக பல கட்சியின் உறுப்பினர்கள் முன்னாள் முதல்- மந்திரி சந்திரசேகர ராவின் மகன் ராமாராவை அனுகியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராமாராவ் உள்ளிட்ட மூத்த பிஆர்எஸ் தலைவர்கள், தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிவதற்காக கடந்த 3-ம் தேதி தொகுதி வாரியாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆர்வலர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.
"ஒவ்வொரு கட்சி கூட்டத்திலும் சில தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் டிஆர்எஸ் பெயரை மாற்றுமாறு மூத்த தலைமையிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தெலுங்கானா இல்லாமல், கட்சியின் பெயர் மக்களுடனான தொடர்பை இழந்துவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள்" என்று பிஆர்எஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மற்றொரு தலைவர் கூறுகையில், பெயர் மாற்றத்தை அவர்கள் வெறுப்பதாகவும், கே.சி.ஆர் என்று பிரபலமாக அழைக்கப்படும் ராவ், கடுமையான முடிவுகளை எடுப்பதற்கும், தனது வெளிப்பாட்டில் சளைக்காமல் இருப்பதற்கும் பெயர் பெற்றவர் என்றார்.
டிஆர்எஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதே, சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் தோல்விக்குக் கூறப்பட்ட முதல் ஐந்து காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் கேசிஆர் தலைமையிலான கட்சி 39 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.