பறவை மோதிய விமானத்தை ஒற்றை என்ஜினுடன் பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகளுக்கு பாராட்டு!

ஸ்பைஸ்ஜெட் விமானிகள் பாட்னாவில் நிலைமையை கையாண்ட விதம் பெருமைக்குரிய விஷயம்.

Update: 2022-06-20 06:49 GMT

புதுடெல்லி,

பீகார் மாநிலம், பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்திலிருந்து, தலைநகர் புதுடெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று நேற்று பகல் 12 மணியளவில் புறப்படத் தயாரானது. அந்த விமானம் வானில் பறக்க தொடங்கியதுடன், தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

விமானத்தில் தீப்பற்றியதை பார்த்த உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக மாவட்ட மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.இதனையடுத்து, டெல்லி செல்லும் விமானம் அவசரமாக பாட்னா விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது. அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.185 பயணிகளும் பத்திரமாக இறங்கினர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் விமான இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து, பொறியியல் குழு மேலும் ஆய்வு செய்து வருகிறது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தீப்பிடித்த விமானத்தை ஒற்றை இன்ஜினுடன் பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது விமானிகள் மோனிகா கன்னா மற்றும் அதிகாரி பல்பிரீத் சிங் பாட்டியா ஆகியோரை பாராட்டியது.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் விமானிகளின் தலைமை கேப்டன் குருசரண் அரோரா கூறியதாவது:-

விமானம் தரையிறங்கிய போது, ஒரு இன்ஜின் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்தனர். பறவை மோதியதால் மின்விசிறி மற்றும் இன்ஜின் சேதமடைந்தது உறுதி செய்யப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் தனது விமானி மோனிகா கன்னா மற்றும் அதன் முதல் அதிகாரி பல்பிரீத் சிங் பாட்டியா ஆகியோரை ஒற்றை எஞ்சினுடன் பாதுகாப்பாக தரையிறக்கினர். ஸ்பைஸ்ஜெட் விமானிகள் பாட்னாவில் நிலைமையை கையாண்ட விதம், அது நன்றாக நிர்வகிக்கப்பட்டது மற்றும் எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம்.

அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமானிகளின் மீதும் நம்பிக்கை வைக்குமாறு அனைத்து பயணிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்கள் அனைவரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள்.

ஸ்பைஸ்ஜெட் எந்த ஒரு நிகழ்வையும் அமைதியான முறையில் கையாளும் திறன் மற்றும் பயிற்சி பெற்ற விமானிகளைக் கொண்டுள்ளது, அதற்காக அனைத்து பயணிகளும் அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்