விமானப்படை தினத்தையொட்டி போர் விமானங்களின் கண்கவர் சாகசம்; ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வையிட்டார்
விமானப்படை தினத்தையொட்டி சண்டிகாரில் போர் விமானங்களின் கண்கவர் சாகசம் மற்றும் படையினரின் அணிவகுப்பு போன்றவை நடைபெற்றன.;
விமானப்படை தினம்
இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 90-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு விமானப்படை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் முக்கியமாக சண்டிகாரில் பாரம்பரிய அணிவகுப்பு மற்றும் போர் விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதன்படி, அங்குள்ள விமானப்படை தளத்தில் காலையில் விமானப்படை வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடந்தது. இதை விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி பார்வையிட்டார்.
முன்னதாக விமானப்படை தளத்துக்கு வி.ஆர்.சவுத்ரி வந்ததும் 3 எம்.ஐ.17வி5 ஹெலிகாப்டர்கள் விமானப்படை கொடியுடன் வானில் பறந்து அவருக்கு வரவேற்பு தெரிவித்தன.
அத்துடன் 3 ஏ.எல்.எச். எம்.கே.4 ரக ஹெலிகாப்டர்கள் ருத்ரா வடிவில் பறந்து அவருக்கு வணக்கம் தெரிவித்தன.
புதிய சீருடை அறிமுகம்
விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு முடிந்ததும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக வாகனத்தை குறுகிய நேரத்தில் பிரித்து போடுவது, மீண்டும் அவற்றை இணைப்பது, துப்பாக்கிகளை கையாளுதல் என பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது விமானப்படை வீரர்களுக்கான புதிய சீருடையை விமானப்படை தளபதி அறிமுகம் செய்தார். அதன்படி புதிய சீருடையில் அதிகாரிகளும், வீரர்களும் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
80 விமானங்கள்
பின்னர் அங்குள்ள சுக்னா ஏரிப்பகுதியில் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடந்தன. இதில் சுமார் 80 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தின.
குறிப்பாக சமீபத்தில் விமானப்படையில் இணைக்கப்பட்ட இலகு ரக 'பிரசந்த்' ஹெலிகாப்டர்கள் மற்றும் துருவ், சினூக், அப்பாச்சி, எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்கள் பல்வேறு வடிவங்களில் பறந்து தங்களின் அபார திறனை வெளிப்படுத்தின.
இதைப்போல சுகோய், மிக்-29, ஜாகுவார், ரபேல், தேஜாஸ் மற்றும் ஹாக் ரக போர் விமானங்களும் வான் பரப்பை ஆளுகை செய்தன.
ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்த கொண்டாட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் கவர்னரும், சண்டிகார் நிர்வாகியுமான பன்வாரிலால் புரோகித், அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, முப்படை தளபதிகள் என ஏராளமானோர் பங்கேற்று விமானப்படையின் கம்பீரத்தை கண்டு களித்தனர்.
முன்னதாக விமானப்படை தினத்தையொட்டி வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருந்தார்.