டெல்லியில் குரங்கம்மை பரவலை தடுக்க தனி குழு; கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் குரங்கம்மை பாதித்த நபரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்தது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் நேற்று கூறும்போது, உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாக சர்வதேச அளவில் பரவியுள்ள குரங்கம்மை பிரதிபலிக்கிறது என கூறியுள்ளார்.
இதுவரை 75 நாடுகளில் பரவி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு ஒருவருக்கு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என டெல்லி சுகாதார துறை இன்று தெரிவித்துள்ளது.
தொற்றுக்கு ஆளான அந்த நபர் (வயது 34) லோக்நாயக் மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்துதல் மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று கூறும்போது, டெல்லியில் குரங்கம்மையின் முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார். அதனால், யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை.
நிலைமை கட்டுக்குள்ளேயே உள்ளது. இதற்காக தனி வார்டு ஒன்றையும் நாங்கள் அமைத்து இருக்கிறோம். குரங்கம்மை பரவலை தடுக்க எங்களது சிறந்த குழு ஒன்று தயார் நிலையில் உள்ளது. அவர்கள் டெல்லி மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என கூறியுள்ளார்.