குருவிக்காரர் மசோதா- மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-22 13:02 GMT

புதுடெல்லி,

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் உள்ள நீண்ட காலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.

அதை தொடர்ந்து பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது. அதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய பழங்குடியின நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் கடந்த 15 ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது.

அப்போது அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததை அடுத்து அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று சட்டமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஒப்புதல்ல் பெற்று சட்டமாகும் போது விரைவில் இது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடும் என கூறப்படுகிறது.

பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர் - குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்