போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை; காங்கிரசார் போராட்டம்

மடிகேரியில் காங்கிரசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியவர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டம் நடந்தது.

Update: 2022-08-19 15:27 GMT

குடகு:

மடிகேரியில் காங்கிரசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியவர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டம் நடந்தது.

பா.ஜனதாவினர் முற்றுகை

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருபவர் சித்தராமையா. இவர் முன்னாள் முதல்-மந்திரியும் ஆவார். நேற்று முன்தினம் இவர் குடகு மாவட்டத்திற்கு வந்தார். அவர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவர் திதிமதி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றபோது அவரை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர். மேலும் அவரது கார் மீது முட்டைகளை வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசிய சம்பவத்தில் போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும், இதனால் குடகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அய்யப்பாவை பணி இடமாற்றம் செய்யக்கோரியும் நேற்று மடிகேரியில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

மடிகேரியில் உள்ள சர்க்கிளில் திரண்ட அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின்போது அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அய்யப்பாவை பணி இடமாற்றம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியவர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மடிகேரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்