காங்கிரசுக்கு ஆதரவாக சோனியா காந்தி நாளை தேர்தல் பிரசாரம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சோனியா காந்தி நாளை கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பெங்களூரு:-
தீவிர பிரசாரம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள. குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். உடல்நிலை காரணமாக இந்த முறை சோனியா காந்தி இதுவரை பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் சோனியா காந்தி நாளை (சனிக்கிழமை) கர்நாடக தேர்தல் பிரசார களத்தில் குதிக்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உப்பள்ளிக்கு வருகை தரும் அவர், அங்கு நடைபெறும் காங்கிரசின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், "6-ந் தேதி (நாளை) பகல் 12.30 மணிக்கு சோனியா காந்தி உப்பள்ளிக்கு வருகிறார். இங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அவர் 3.30 மணிக்கு மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்" என்றனர்.
ஜெகதீஷ் ஷெட்டர்
சோனியா காந்தி ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலந்து கொண்டு பேசுகிறார். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் களத்தில் உள்ளார். பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால் அவர் கட்சி மாறி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.