வடமாநிலங்களில் பலமடங்கு உயர்ந்த ரெயில் கட்டணம்... பயணிகள் கடும் அவதி

சாத் பூஜையை முன்னிட்டு வடமாநிலங்களில் ரெயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2023-11-18 06:47 GMT

Image Credits: PTI

புதுடெல்லி,

வடமாநிலங்களில் சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் இந்து பண்டிகையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 4 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சாத் பூஜை வரும் 20 தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின்போது மக்கள் வழிபடுவார்கள். பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடன் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் சாத் பூஜையை முன்னிட்டு வடமாநிலங்களில் இதுவரை இல்லாத வகையில் ரெயில் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறைவான கட்டணம் கொண்ட இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அதிக கட்டணம் கொண்ட ஏசி பெட்டிகள் அதிகம் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக மும்பை - பாட்னா இடையே இயக்கப்படும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிப்படை கட்டணம் ரூ.2,950 ஆக இருந்த நிலையில் டைனமிக் கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக ரூ.6,555 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. சாத் பூஜையை கொண்டாட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரெயில் கட்டண உயர்வால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும் கடந்த ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை,ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் விற்பனை மூலம் ரெயில்வே நிர்வாகம் ரூ.1,034 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளின் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அதற்கு சேவை கட்டணமாக ரூ.83.85 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்