கர்நாடகத்தில் இதுவரை 5.86 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வினியோகம்-சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

கர்நாடகத்தில் இதுவரை 5.86 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

Update: 2022-11-22 16:15 GMT

பெங்களூரு: கர்நாடகத்தில் இதுவரை 5.86 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அடையாள அட்டை

கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கி வருகிறோம். கர்நாடகத்தில் இதுவரை 5.86 லட்சம் பேருக்கு இந்த அடையாள அட்டையை வினியோகம் செய்துள்ளோம். மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கர்நாடகத்தில் ராமநகர் மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையில் இந்த அடையாள அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. சிக்கமகளூரு 2-வது இடத்தில் உள்ளது. பாகல்கோட்டை, ஹாவேரி, உத்தரகன்னடா, பெலகாவி மற்றும் மண்டியா மாவட்டங்களிலும் அதிக அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக நான் அந்த மாவட்டங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகளை பாராட்டுகிறேன்.

மாற்றுத்திறனாளிகள் தங்களின் உடல் ஊனம் குறித்த விவரங்களை சுகாதாரத்துறையின் யு.டி.ஐ.டி. இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் தகவல்களை பதிவேற்றம் செய்துவிட்டால், உடனடியாக அவர்களுக்கு அடையாள அட்டை கிடைக்கும். அந்த அடையாள அட்டைகளை கொண்டு அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்களை பெற முடியும்.

21 வகையான உடல் ஊனம்

இந்த அடையாள அட்டையை கொண்டு பயனாளிகளுக்கு அரசின் உதவிகள் போய் சேர்ந்துள்ளதா? என்பதை எங்களால் வட்டார அளவில் கண்காணிக்க முடியும். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். 7 வகையான உடல் ஊனத்தை நாங்கள் மாற்றுத்திறனாளிகள் என்று பட்டியலிட்டு இருந்தோம். ஆனால் சட்டத்தில் திருத்தம் செய்து 21 வகையான உடல் ஊனங்களை இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களின் ஊனம் குறித்த விவரங்கள் சேகாிக்கப்படுகிறது. கல்வி, வேலை வாய்ப்பு விவரங்களையும் சேகரிக்கிறோம். 40 சதவீத உடல் ஊனம் உள்ளவர்களை அரசு மாற்றுத்திறனாளிகள் என்று கருதுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2.21 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்