கர்நாடகத்தில் இதுவரை 36 ரவுடிகள் பா.ஜனதாவில் சேர்ந்தனர்; காங்கிரஸ் சொல்கிறது

கர்நாடகத்தில் இதுவரை பா.ஜனதா கட்சியில் 36 ரவுடிகள் சேர்துள்ளனர் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.;

Update:2022-12-07 00:15 IST

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் லட்சுமண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரவுடிகளின் எண்ணிக்கை

கர்நாடகத்தில் பா.ஜனதாவில் சேர உள்ள ரவுடிகளின் பட்டியலில் வெளியிடுவோம் என்று கடந்த வாரம் கூறினோம். அதன்படி இன்று (நேற்று) அக்கட்சியில் சேரவுள்ள ரவுடிகளின் பட்டியலை வெளியிடுகிறோம். கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக போலீஸ் துறையின் புள்ளி விவரங்கள்படி மாநிலத்தில் 23 ஆயிரம் ரவுடிகள் உள்ளனர். அந்த எண்ணிக்கை தற்போது 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதில் பெங்களூருவில் உள்ள ரவுடிகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 620 ஆக உள்ளது. இதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உள்ளது. பெங்களூருவில் ஆயிரம் ரவுடிகள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜனதாவில் 60 ரவுடிகள் சேர தயாராக உள்ளனர். அதனால் அக்கட்சி ரவுடிகள் அணி தொடங்கும்.

போட்டியிட டிக்கெட்

கர்நாடகத்தில் இதுவரை முதல்கட்டமாக பா.ஜனதாவில் 36 ரவுடிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் 24 ரவுடிகள் அக்கட்சியில் சேர உள்ளனர். மாநிலத்தில் 150 ரவுடிகளை கட்சியில் சேர்த்து கொள்ள அக்கட்சி பட்டியல் தயாரித்துள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்ட ரவுடிகளில் 10 பேருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. 26 ரவுடிகளுக்கு பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அக்கட்சி முடிவு செய்துள்ளது.

பினாமி பெயர்களில் சொத்து

மாநிலத்தில் மத வன்முறையை தூண்டி விடுவதில் சி.டி.ரவி முதன்மையானவர். அவருக்கு ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகள் உள்ளன. பினாமி பெயர்களில் சொத்துகளை குவித்துள்ளார். ரூ.800 கோடி சொத்து ஆவணங்களை நாங்கள் சேகரித்துள்ளோம்.

இவ்வாறு லட்சுமண் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்