'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து இதுவரை 21 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்பு - 81% பேர் ஆதரவு
இதுவரை 17 அரசியல் கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக நடத்தாமல் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதே 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதாகும்.
கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். ஆனால் இது சாத்தியம் அல்ல என்று எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். எனினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும்படி தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் உயர்மட்டக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து இதுவரை 21 ஆயிரம் பேரிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 81 சதவீதம் பேர் இந்த திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே 46 அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்ட நிலையில், இதுவரை 17 கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.