துபாயில் இருந்து சென்னைக்கு 6 கிலோ தங்கம் கடத்தல் - விமான நிலையத்தில் 5 பேர் கைது
துபாயில் இருந்து சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்த 5 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.;
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது 5 பயணிகள் துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர்கள் 5 பேரும் தங்கள் உள்ளாடைகளில் தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் 5 பேரிடம் இருந்தும் மொத்தம் 6 கிலோ 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 5 பேரும் முதல் முறையாக தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்து, இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.