திருவனந்தபுரத்தில் கேரள பல்கலைக்கழக வளாக தண்ணீர் தொட்டிக்குள் ஆணின் எலும்புக்கூடு - போலீசார் தீவிர விசாரணை

திருவனந்தபுரத்தில் கேரள பல்கலைகழக கல்லூரி வளாகத்தின் பழைமையான தண்ணீர் தொட்டிக்குள் ஆணின் எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-02-29 21:16 GMT

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் கேரள பல்கலைக்கழக கல்லூரி (கேம்பஸ்) உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள சுமார் 20 அடி ஆழமுள்ள பழமையான தண்ணீர் தொட்டி உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கல்லூரி துப்புறவு பணியாளர்கள் தூய்மை செய்வதற்காக தொட்டியின் மூடியை திறந்து பார்த்தனர். அப்போது அந்த தொட்டிக்குள் மனித எலும்புக்கூடு கிடப்பதை கண்டு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக கழக்கூட்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து எலும்புக்கூடு கிடப்பதை உறுதி செய்தனர். ஆனால் தகுந்த பாதுகாப்பு இன்றி 20 அடி ஆழமுள்ள தொட்டிக்குள் இறங்குவது உயிருக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதால், நேற்று முன்தினம் போலீசார் அந்த முயற்சியை கைவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் தடயவியல் அதிகாரிகள் தொட்டிக்குள் இறங்கி எலும்புக்கூடை வெளியே எடுத்து வந்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த எலும்புக்கூடு ஆணுடையது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், அந்த தொட்டிக்குள் தொப்பி, டை மற்றும் மூக்கு கண்ணாடி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர், மோப்பநாய் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

எலும்பு கூடு கிடந்த தண்ணீர் தொட்டி கேரள குடிநீர் ஆணையத்திற்கு சொந்தமானது. நீண்ட நாட்களாக தண்ணீர் இல்லாமல் இருந்துள்ளது. இந்த தொட்டிக்குள் இறங்கிய நபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு ஆணின் எலும்புக்கூடு என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இறந்தவர் யார் என்பதை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும், சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை போலீஸ் நிலையங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்