வேலைக்கு சென்றாலும்தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம்-ஐகோர்ட்டு அனுமதி

வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம் என மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Update: 2023-04-15 01:26 GMT

ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் கோர்ட்டில் ஆசிரியையான ஷப்னம்ஜகான் அன்சாரி(வயது47) என்ற பெண் தனது தங்கையின் 4 வயது மகளை தத்தெடுக்க உரிமை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இவரது மனுவை விசாரித்த கோர்ட்டு, ஷப்னம் ஜகான் அன்சாரி விவகாரத்து பெற்றவர் மட்டுமின்றி அவர் வேலை செய்து வருகிறார். எனவே அவரால் குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாது என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தது.மேலும் குழந்தை தனது பெற்றோருடனே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்தநிலையில் கீழ்கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஷப்னம் ஜகான் அன்சாரி மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.அதில், கீழ் கோர்ட்டின் இதுபோன்ற உத்தரவு விபரீதமானது மற்றும் நியாயமற்றது என்று தனது மனுவில் கூறி இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கவுரி கோட்சே தலைமையிலான அமர்வு, ஷப்னம் ஜகான் அன்சாரி 4 வயது சிறுமியை தத்தெடுக்க அனுமதி அளித்தது.

மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:-

குழந்தையின் உயிரியல் தாய் ஒரு இல்லத்தரசி மற்றும் வருங்கால வளர்ப்பு தாய் (ஒற்றைப் பெற்றோர்) மட்டுமின்றி பணிபுரிந்து வருகிறார் என்ற கீழ் கோர்ட்டின் ஒப்பீடு பழமைவாத கருத்துகளின் மனநிலையை பிரதிபலிக்கிறது.ஒற்றை பெற்றோர் தத்தெடுக்கும் பெற்றோராக இருக்க சட்டம் அங்கீகரிக்கும்போது, கீழ் கோர்ட்டு இந்த அணுகுமுறை சட்டத்தின் நோக்கத்தை பொய்யாக்குகிறது.பொதுவாக ஒற்றை பெற்றோர் உழைக்கும் நபராக இருக்க வேண்டும். சில அரிதான விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அவர் அல்லது அவர் யாராக இருந்தாலும் வேலை செய்யும் நபர் என்ற ஒரே காரணத்திற்காக வளர்ப்பு பெற்றோராக இருக்க தகுதியற்றவராக கருத முடியாது.எனவே அந்த பெண் தகுதியற்றவர் என்பதற்கு கீழ் கோர்ட்டு கூறிய காரணம் ஆதாரமற்றது, சட்டவிரோதமானது, விபரீதமானது நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எனவே கீழ் கோர்ட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்