கலவரம் தொடர்பாக இதுவரை 43 பேர் கைது; சிவமொக்காவில் அமைதி திரும்புகிறது

சிவமொக்காவில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் பதற்றத்தால் 144 தடை உத்தரவு நகர் முழுவதும் நீட்டிக்கப்பட்டு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகரில் அமைதி திரும்புகிறது.;

Update:2023-10-03 03:28 IST

சிவமொக்கா:

சிவமொக்காவில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் பதற்றத்தால் 144 தடை உத்தரவு நகர் முழுவதும் நீட்டிக்கப்பட்டு 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகரில் அமைதி திரும்புகிறது.

மீலாது நபி பண்டிகை

சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 28-ந் தேதி மீலாது நபி பண்டிகை கொண்டாடுவதாக இருந்தது.அன்றைய தினம் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்ததால் மீலாது நபி பண்டிகை கொண்டாட்டத்தை தள்ளி வைக்கும்படி போலீசார் கூறினர். அதன்படி நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மீலாது நபி பண்டி கையை கொண்டாட முஸ்லிம்கள் முடிவு ெசய்தனர். அதன்படி நேற்று முன்தினம் காலை மீலாது நபி பண்டிகை கொண்டாடப்பட்டது.

குறிப்பாக சிவமொக்கா நகரில் உள்ள சாந்திநகர், ராகிகுட்டார், காந்திபஜார், தேவராஜ் அர்ஸ் சாலை, அமீர் அகமது சர்க்கிள் உள்பட சில இடங்களில் மீலாது நபி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி சாந்திநகரை அடுத்த ராகிகுட்டாவில் திப்புசுல்தான் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அந்த பேனரில் சர்ச்சைக்குரிய வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் போலீசார் அதை அழிக்கும்படி செய்தனர். இருப்பினும் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

கலவரம்-தடியடி

இந்தநிலையில் ராகிகுட்டா பகுதியில் மாலையில் மீலாது நபி பண்டிகை ஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர், அந்த பகுதியில் இருந்த வீடுகள், வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீடுகள், வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீதும் கல்வீசி தாக்கினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் கலவரமாக மாறியது.

இதை பார்த்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து போலீசார் கலவரத்தை தடுக்கும் நோக்கில் தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இந்த கலவரத்தில் போலீசார் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் ராகிகுட்டா பகுதியில் மட்டும் நேற்று முன்தினம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நகரப்பகுதியில் 144 தடை உத்தரவு

இந்தநிைலயில் நேற்றும் தொடர்ந்து பதற்றம் நிலவியதால் மாவட்ட கலெக்டர் செல்வமணி நகரப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க நேற்று 3 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் சிவமொக்கா நகரப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் 144 தடை உத்தரவை தொடர்ந்து சாந்திநகர், ராகிகுட்டா, காந்திபஜார், தேவராஜ் அர்ஸ் சாலை, அமீர் அகமது சர்க்கிள், நேரு சாலை, கோவி சதுக்கம் ஆகிய இடங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் ரோந்து வாகனங்களில் சென்றபடி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் யாரும் வெளியே வர வேண்டாம் என்று போலீசார் எச்சரித்தனர்.

இந்தநிலையில் சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை ராகவேந்திரா எம்.பி., முன்னாள் மந்திரி கே.எஸ்.ஈசுவரப்பா மற்றும் சன்னபசப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களிடம் சம்பவம் பற்றி கேட்டறிந்தனர்.

43 பேர் கைது

இதற்கிடையில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தின் போது போலீசார் 10-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருந்தனர். இந்தநிலையில் இந்த கலவரம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சிலர் கையில் ஆயுதங்களுடன் நிற்பதுபோன்றும், கற்கள், கட்டைகளுக்குடன் நிற்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்கள், கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சிலரை கைது செய்தனர். அதன்படி 2-வது நாளான நேற்று 33 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கலவர சம்பவத்தில் இதுவரை 43 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமைதி திரும்புகிறது

இதற்கிடையே போலீசாரின் ரோந்துப்பணி, கண்காணிப்பு பணி மற்றும் 144 தடை உத்தரவால், சிவமொக்காவில் கலவரம் நடந்த பகுதிகளில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

இந்தநிலையில் சிவமொக்கா டவுனில் உள்ள வணிகர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி கோரினர். அதற்கு கலெக்டர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அனுமதி வழங்கியதும், நேற்று மாலை காந்திபஜார் உள்பட சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டது. மக்களும் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி செல்ல தொடங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்