சீக்கியரிடம் உதவி கேட்பது போல் நடித்து கண்களில் மிளகாய் பொடி தூவி முடியை வெட்டிச் சென்ற மர்ம ஆசாமிகள்!

ராஜஸ்தானில் சீக்கிய குருத்வாராவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Update: 2022-07-22 14:54 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் சீக்கிய குருத்வாராவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சீக்கியர்களின் புனித நூலான ஸ்ரீ குரு கிரந்த சாஹிப்பை ஒரு குருத்வாராவில் படிக்கும் சடங்கில் ஈடுபடும் ஒரு நபர் 'கிரந்தி' என்றழைக்கப்படுவார். குருபக்ஷ சிங் என்ற கிரந்தி ஒருவர், கடந்த வியாழக்கிழமை இரவு அலவாடா கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் நடுவழியில் உதவி கேட்பது போல் சிலர் நடித்துள்ளனர். அவரும் அவர்களுக்கு உதவுவதற்காக வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவிவிட்டு அவரை சரமாரியாக அந்த கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், அவரது தலைமுடியை மர்ம ஆசாமிகள் வெட்டிச் சென்றனர் என்று குருபக்ஷ சிங் போலீசில் புகார் அளித்தார். அவரை கொல்லும் எண்ணத்துடன் அங்கே வந்த கும்பல், ஆனால், தாங்கள் சுற்றி வளைத்தவர் ஒரு இந்து பூசாரி அல்ல, அவர் ஒரு 'சீக்கியர்' என்பதை அறிந்ததும், அவர்கள் அவரை உயிருடன் விட்டுச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், அலவாடா கிராமத்தில் சீக்கியர்களுக்கும் மியோ முஸ்லிம்களுக்கும் இடையே காதல் விவகாரத்தில் இருந்த பழைய பகையின் காரணமாக சிங் குறிவைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

ஒருவரிடம் உதவி கேட்பது போல் நடித்து, கண்களில் மிளகாய் பொடி தூவி தலைமுடியை வெட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்