கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார்

பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடைபெறும் விழாவில் கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்கிறார். இதில் சோனியாகாந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்பட பல தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

Update: 2023-05-19 20:33 GMT

பெங்களூரு:-

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது.

காங்கிரஸ் ஆட்சி

இந்த ஆட்சியின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு கடந்த10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவு வெளியானது.

இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்தது. இதையடுத்து இருவரையும் அழைத்து காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

135 பேர்களில் 80-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு கிடைத்தது. இதையடுத்து சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்தது. ஆனால் டி.கே.சிவக்குமார் இதை ஏற்க மறுத்துவிட்டார்.

தான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்து ஆட்சியில் அமர்த்தியுள்ளேன், அதனால் முதல்-மந்திரி பதவியை எனக்கு தான் வழங்க வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார்.

4 நாட்கள் இழுபறி

இதனால் முதல்-மந்திரி குறித்து இறுதி முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறியது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள் எடுத்து கூறியும் டி.கே.சிவக்குமார் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

4 நாட்கள் இழுபறி நிலைக்கு பிறகு இறுதியாக இந்த விவகாரத்தில் சோனியா காந்தி தலையிட்டார். சிம்லாவில் உள்ள அவர் டி.கே.சிவக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, கட்சியின் எதிர்கால நலன் கருதி மல்லிகார்ஜுன கார்கே கூறும் முடிவை ஏற்று ஒத்துழைப்பு வழங்குங்கள், நான் உங்களுடன் உள்ளேன், நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறினார்.

சித்தராமையா தேர்வு

சோனியா காந்தியின் இந்த வார்த்தைகளால் டி.கே.சிவக்குமார் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். கட்சியின் முடிவை ஏற்பதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து சித்தராமையா கர்நாடக முதல்-மந்திரியாகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் அறிவிக்கப்பட்டனர். கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சித்தராமையா சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று பதவி ஏற்பு விழா

அதைத்தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ராஜ்பவனுக்கு நேரில் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்து கடிதத்தை சித்தராமையாவிடம் வழங்கினார். அதன்படி கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்கும் விழா இன்று (சனிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு கன்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதில் சித்தராமையாவுடன் துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மந்திரிகள் பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த விழாவில் அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

யார்-யார்?

அதாவது காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரிகள் நிதிஷ்குமார்(பீகார்), மு.க.ஸ்டாலின்(தமிழ்நாடு), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல்(சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு(இமாசல பிரதேசம்), ஹேமந்த் சோரன்(ஜார்கண்ட்), பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

அறிவிப்பு

பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித்தராமையா, பெங்களூரு விதானசவுதாவில் (சட்டசபை) உள்ள முதல்-மந்திரி அறைக்கு செல்கிறார். அவர் அங்கு காங்கிரஸ் அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பயணம், இல்லதரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை உள்பட 5 உத்தரவாத திட்டங்களுக்கான அறிவிப்புகள் பற்றி சித்தராமையா வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்துக்கு தடை

பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா ஸ்டேடியத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்தும்படி போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் விழாவையொட்டி விழா நடைபெறும் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) எழுதும் மாணவர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வந்துவிடுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கன்டீரவா ஸ்டேடியத்துக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களுக்கு வருவதில் மாணவர்கள் யாருக்காவது சிரமம் ஏற்பட்டால், அத்தகையவர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கர்நாடகம் கண்ட

முதல்-மந்திரிகள் கர்நாடகத்தில் இதுவரை முதல்-மந்திரிகளாக இருந்தவர்கள் விவரம் வருமாறு:-

1. கே.சி.ரெட்டி-1947

2. கெங்கல் ஹனுமந்தய்யா-1952

3. கடிதாள் மஞ்சப்பா-1956

4. நிஜலிங்கப்பா-1956, 1962

5. பி.டி.ஜாட்டி-1958

6. எஸ்.ஆர்.கன்டி-1962

7. வீரேந்திர பட்டீல்-1968, 1989

8. தேவராஜ் அர்ஸ்-1972, 1978

9. குண்டுராவ்-1980

10. ராமகிருஷ்ண ஹெக்டே-1983, 1985, 1986

11. எஸ்.ஆர்.பொம்மை-1998

12. எஸ்.பங்காரப்பா-1990

13. வீரப்பமொய்லி-1992

14. தேவேகவுடா-1994

15. ஜே.எச்.பட்டீல்-1996

16. எஸ்.எம்.கிருஷ்ணா-1999

17. தரம்சிங்-2004

18. குமாரசாமி-2006, 2018

19. எடியூரப்பா-2007, 2008, 2018, 2019

20. சதானந்தகவுடா-2011

21. ஜெகதீஷ் ஷெட்டர்-2012

22. சித்தராமையா-2013

23. பசவராஜ் பொம்மை-2021

24. சித்தராமையா-2023 (தற்போது பதவி ஏற்கிறார்)

Tags:    

மேலும் செய்திகள்