ஜனாதிபதியுடன் சித்தராமையா சந்திப்பு

2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்ற கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். மேலும் அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசி வழங்க மத்திய மந்திரி அமித்ஷாவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.;

Update:2023-06-22 02:30 IST

பெங்களூரு:

2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்ற கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். மேலும் அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசி வழங்க மத்திய மந்திரி அமித்ஷாவிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

சித்தராமையா டெல்லி பயணம்

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா கடந்த மாதம் (மே) 20-ந்தேதி பதவி ஏற்றார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் முதல்-மந்திரி பதவி விவகாரம் மற்றும் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக சித்தராமையா அடிக்கடி டெல்லி சென்று வந்திருந்தார். ஆனால் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு அவர் டெல்லிக்கு செல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முதல்-மந்திரி சித்தராமையா டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று காலை 9.30 மணியளவில் அவர் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்வதாக இருந்தது. தன்னுடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் காலை 11 மணியளவில் சிறப்பு விமானத்தில் சித்தராமையா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு

டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் நேற்று மதியம் அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் நேற்று மாலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முதல்-மந்திரி சித்தராமையா சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சித்தராமையா சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றிருப்பதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து முதல்-மந்திரி சித்தராமையா புறப்பட்டார். அப்போது முதல்-மந்திரி சித்தராமையாவிடம் அன்ன பாக்ய திட்டத்திற்கு மத்திய அரசு அரிசி வழங்காமல் இருக்கும் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

மத்திய அரசு அரசியல் செய்கிறது

காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது. அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. மத்திய அரசு அரசியல் செய்வதன் காரணமாக அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆகலாம். என்றாலும், அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். ஏற்கனவே இந்திய உணவு கழகம் கர்நாடகத்திற்கு அரிசி வழங்க மறுத்துள்ளது.

அன்ன பாக்ய திட்டத்திற்கு அரிசி வழங்கும் விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து பேசவில்லை. அவரை சந்தித்து பேச நேரமும் கேட்கவில்லை. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச அவகாசம் கேட்டு இருந்தேன். இன்று (நேற்று) இரவு 9 மணி அளவில் சந்தித்து பேச அவர் அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி, அமித்ஷாைவ சந்தித்து கர்நாடகத்திற்கு அரிசி வழங்கும் விவகாரம் குறித்து பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைவர்களுடன் ஆலோசனை

டெல்லியில் முகாமிட்டுள்ள முதல்-மந்திரி சித்தராமையா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து அன்ன பாக்ய திட்டத்திற்காக கர்நாடகத்திற்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கும்படி வலியுறுத்தி உள்ளார். அதே நேரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சில மத்திய மந்திரிகளையும் சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்திருக்கிறார். அப்போது சித்தராமையா, கர்நாடகத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், அந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுக்க உள்ளார்.

இதுதவிர அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவையும் சந்தித்து முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, பிரதமர் மோடியையும் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதால், சித்தராமையாவுக்கு அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்