முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு
முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
பெங்களூரு:
முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் சட்டசபையில் 2023-24-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் 3 மணி நேரம் நின்றபடி பட்ஜெட் புத்தகத்தை வாசித்தார். தனது உரையின் நடுவே அவருக்கு இருமல் வந்தபடி இருந்தது. இந்த நிலையில் அவருக்கு சளி அதிகரித்ததால், உடல் சோர்வாக காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரை நேரில் சந்திக்க தலைமை செயலாளர் வந்திதா சர்மா, கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஸ் கோயல், போலீஸ் உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சரத் சந்திரா ஆகியோர் சித்தராமையாவின் வீட்டுக்கு வந்தனர்.
ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அதிகாரிகளை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். இதனால் சிறிது நேரம் வீட்டின் முன்பு காத்திருந்த அதிகாரிகள் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இது மட்டுமின்றி மேலும் சில நிகழ்ச்சிகளையும் சித்தராமையா ரத்து செய்துவிட்டார். ஆனால் 'ஜனமன' என்ற நிகழ்ச்சியில் மட்டும் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.