மணிப்பூரின் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு - இயல்பு வாழ்க்கை முடங்கியது
7 பேர் கைதை கண்டித்து மணிப்பூரின் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இம்பால்,
கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில், மெய்தி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். குகி பயங்கரவாதிகள் இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக 4 பேர் உள்பட சூரச்சந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரை என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு மாவட்டத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கைதை கண்டித்தும், அவர்களை 48 மணி நேரத்துக்குள் விடக்கோரியும், குகி அமைப்புகள் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் நேற்று காலவரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதைப்போல மாணவர் அமைப்புகளும் நேற்று 12 மணி நேர முழு அடைப்பை நடத்தின.
இதனால் சூரச்சந்த்பூர் மாவட்டத்தில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது. தனியார் வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. சந்தைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
முழு அடைப்பையொட்டி மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.