ஷ்ரத்தா கொலையாளியை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும்: சஞ்சய் ராவத்
ஷ்ரத்தா கொலையாளியை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய், மாணிக்பூர் பகுதியை சேர்ந்த விகாஷ் என்பவரின் மகள் ஷ்ரத்தா (வயது26). இவர் மும்பை மலாடு பகுதியில் உள்ள கால்சென்டரில் வேலை செய்து வந்தபோது, அப்தாப் அமீன் பூனாவாலா (28) என்ற வாலிபருடன் காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஷ்ரத்தா பெற்றோரை பிரிந்து வசாய் பகுதியில் காதலனுடன் தனியாக வசித்து வந்துள்ளனர். பின்னர் டெல்லி சென்று குடியேறி உள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்த நிலையில் ஷ்ரத்தா காதலனால் கொலை செய்யப்பட்டு உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்டதோடு, உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் 18 நாட்கள் வைத்திருந்து காட்டில் வீசிய கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இளம்பெண் ஷ்ரத்தாவைக் கொடூரமாகக் கொன்ற நபரை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் என சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இளம்பெண் ஷ்ரத்தாவைக் கொன்றவனைப் பகிரங்கமாக பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும், நம் பெண்கள் யாரையும் நம்பும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் இதை லவ் ஜிகாத் என்று அழைக்கலாம், ஆனால் நமது மகள்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற வழக்குகளில் சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. இதை ஒட்டுமொத்த சமூகமும் கையாள வேண்டும்" என்று அவர் கூறினார்.