என்னடா மனஷன் இவன்....! ஷ்ரத்தா கொலை வழக்கில் கடும் விசாரணை நெருக்கடியிலும் சலனமின்றி காட்சி அளிக்கும் அப்தாப்

காவலில் இருக்கும் அப்தாப்பின் அமைதியான மற்றும் இணக்கமான நடத்தைகள் சமூக ஊடகங்களில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

Update: 2022-12-01 11:52 GMT

புதுடெல்லி

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியர் ஷ்ரத்தா கடந்த மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. கொடூரமாக நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஷ்ரத்தாவை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் போலீசார், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கடந்த 10-ந் தேதி முக்கிய குற்றவாளியாக சந்தேகப்படும் அப்தாப் அமீனை அவரது வீட்டில் பிடித்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப்பிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

ஷ்ரத்தாவை கொலை செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட வழக்குக்கு தேவையான கேள்விகள், அவரிடம் கேட்கப்பட்டது. அப்தாப் பொய் சொல்கிறாரா என்பதை கண்டறியும் 'பாலிகிராப்' சோதனை கடந்த சில நாட்களுக்கு அவருக்கு நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து நார்கோ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை நார்கோ சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் பல்வேறு உண்மைகள் தெரியவரும் என்று போலீசார் நம்புகின்றனர். இந்த நிலையில், அப்தாப்பிற்கு நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை நிறைவு பெற்றதாக டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

காவலில் இருக்கும் அப்தாப்பின் அமைதியான மற்றும் சலனமற்ற நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

அவர் கடுமைஅயான விசாரணையில் இருந்த நேரத்தில் அமைதியாக இருக்க உதவியது எது என்பது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஷ்ரத்தாவைக் கொலை செய்த அப்தாப், இதுபோன்ற கொலை வழக்குகளைச் செய்தவர்களின் நடவடிக்கைகள் எப்படியிருக்கும் என்று தொடர்ந்து கவனித்துள்ளார்.

மிகப் பிரபலமானவர்கள் இதுபோன்ற வழக்குகளில் சிக்கும்போது எப்படி நடந்து கொண்டார்கள், எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதை நாள் ஒன்று முதல் இணையத்தில் தேடி தேடிப் பார்த்துள்ளார். குற்ற வழக்குகளின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்திருப்பதைக் காட்டுகிறது.

இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் சிக்கியவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அதனை பயிற்சி செய்ததால்தான், இவ்வளவு கடுமையான விசாரணைகளின் போதும் தான் அமைதியாக இருக்க உதவியதாக அப்தாப் ஒப்புக் கொண்டதாகவும் போலீசார் கூறுகிறார்கள்.

அது மட்டுமல்ல, கொலை மற்றும் கொலையை மறைப்பது என பல்வேறு ஆழமான விஷயங்களையும் அங்குலம் அங்குலமாக அப்தாப் இணையத்தில் தேடி தேடிப் படித்துள்ளார்.

மிகவும் அழுத்தமாக இருக்கும்போது மக்கள் நடந்து கொள்ளும் விதம் என்பது பற்றியும் அவர் இணையதளத்தில் தேடியிருப்பதாக ஹிஸ்டரி காட்டுகிறது.

பாலிகிராப் சோதனையின்போது கூட, அவர் அமைதியாகவே இருந்ததாகவும், அவரது முகத்தில் எந்த சோகமும் பதற்றமும் காணப்படவில்லை என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்

திகார் சிறைத் துறை அதிகாரிகளும், மற்ற கொலைக் குற்றவாளிகள் போல் அல்லாமல், அப்தாப் இரவில் மிக நிம்மதியாக உறங்குவதாகவும், கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, மற்றவர்களைப் போல, சிறைக் கைதிகளுடன் பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது, அப்தாப், கொலை செய்த பிறகு ஷ்ரத்தாவின் மொபைல் உள்ளிட்ட தடயங்களை அழிக்க, டெல்லியிலிருந்து மும்பை சென்று வந்திருக்கலாம் என்றும் வழக்கம் போல பேருந்து அல்லது ரெயிலில் செல்லாமல், மிக விரைவாகச் சென்று வர விமானத்தில் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்