அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணம்: திறமையற்ற முதல்-மந்திரி, சுகாதார மந்திரி பதவி விலக வேண்டாமா? ஆதித்ய தாக்கரே கேள்வி

அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணத்திற்கு காரணமாக திறமையற்ற முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டாமா என்று ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பினார்.;

Update:2023-10-08 05:15 IST

நோயாளிகள் இறப்பு

நாந்தெட்டில் உள்ள டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குழந்தைகள் உள்பட 31 நோயாளிகள் இறந்தனர். இதே நேரம் சத்ரபதி சாம்பாஜி நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 18 நோயாளிகள் இறந்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ குழு

மராட்டியத்தில் கொரோனா தொற்று பரவலின்போது அப்போது முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்காக பிரசவ வார்டுகளை உருவாக்குமாறு மருத்துவமனைகளை கேட்டுக்கொண்டார்.ஆனால் தற்போது நடைபெறும் சட்டவிரோதமான ஆட்சியில் முதல்-மந்திரிக்கு நாந்தெட் ஆஸ்பத்திரிக்கு செல்ல கூட நேரம் இல்லை. ஆனால் சட்டவிரோத முதல்-மந்திரிக்கு பொறுப்பு மந்திரி விவகாரம் மற்றும் மந்திரிசபை விரிவாக்கம் என தனது சுயநல நோக்கத்திற்காக டெல்லி செல்ல முடிகிறது. அரசின் ஊழல் மிகுந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரத்துறையை கண்டுகொள்ள அவருக்கு நேரம் இல்லை.

இத்தனை உயிரிழப்பு பதிவான பின்னரும் சுகாதாரத்துறை மந்திரி வெட்கமின்றி எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இப்படிப்பட்ட திறமையற்ற முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி பதவிநீக்கம் செய்யப்பட வேண்டாமா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்