கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உணவு பற்றாக்குறையால் மக்கள் அவதி
கலவரம் பாதித்த மணிப்பூரில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து உள்ளனர்.
இம்பால்,
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள 'மெய்தி' இன மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி வருவதற்கு எதிராக பழங்குடியின மக்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அதில் ஏற்பட்ட வன்முறையால் இருதரப்புக்கும் இடையே கலவரம் வெடித்தது.
இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். கலவரத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
லாரிகள் எரிப்பு
இந்த கலவரத்தால் சுரசந்த்பூர், டெங்னோபால், பிஷன்பூர், கங்க்போக்பி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் தற்போது அமைதி திரும்பி மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல சுமுக நிலைக்கு வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளில் மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் பிரதான 2 நெடுஞ்சாலைகள் மூலம் மேற்படி பொருட்களை மாநிலத்துக்குள் கொண்டு செல்ல முடியவில்லை.
இந்த பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை மாநிலத்துக்குள் கொண்டு வர மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் கங்க்போக்பி மாவட்டத்தில் இந்த லாரிகள் கடத்தப்படுவதும், எரிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால் பொருட்களை லாரிகளில் கொண்டு செல்ல முடியவில்லை.
10 கிலோ அரிசி
இதைப்போல இம்பால்-மாவ் நெடுஞ்சாலை பல நேரங்களில் பழங்குடி மக்களால் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் தலைநகர் இம்பால் உள்பட பல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை.
இம்பாலில் உணவு தானியங்கள், பருப்பு, சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு போன்றவை இல்லை என வர்த்தகர்கள் கூறியுள்ளனர். எனவே 10 மாவட்டங்களை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 கிலோ அரிசி மூலம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்து உள்ளது. மாநிலத்தில் குடோன்களில் அரிசி இருப்பு உள்ளதாக பொது வினியோகத்துறை மந்திரி சுசிந்திரோ தெரிவித்தார்.மாநிலத்தில் வங்கிகள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. நேற்று சில பகுதிகளில் ஓரிரு ஏ.டி.எம்.கள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
இணைய சேவை முடக்கம்
பெட்ரோல் விற்பனை நிலையங்களும் சில மணி நேரங்கள் மட்டுமே இயங்குகின்றன. அங்கு வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கே எரிபொருள் வழங்கப்படுகிறது. மாநிலத்தில் கடந்த 3-ந்தேதி முதல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், ஊடக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் இன்னும் நிவாரண முகாம்களில் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உடனடி தேவை என கூறியுள்ளனர்.