நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது தேசத்துரோகம் போன்றது - ராகுல்காந்தி மீது மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ராகுல்காந்தி இந்தியாவை வெளிநாட்டில் அவமதிப்பதாக மத்திய மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
ராஞ்சி,
வெளிநாடுகளில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது தேசத் துரோகம் போன்ற குற்றம் என்றும், தேசபக்தர் எவராலும் இதை செய்ய முடியாது என்றும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாஷிங்டனில் பேசியதற்கு மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விரக்தியில் இருப்பவர்தான் தனது சொந்த நாட்டை வெளிநாட்டில் வைத்து அவமதிப்பார். அதன் நற்பெயரை சீர்குலைப்பார். ராகுல்காந்தி, மத்திய அரசைப் பற்றி கேள்வி எழுப்புவதுடன், தேர்தல் கமிஷன் குறித்தும் கேள்வி எழுப்புகிறார். தனது சொந்த நாட்டை மற்றொரு நாட்டில் விமர்சிப்பது தேசபக்த செயல் அல்ல. தேசத்துரோகம் போன்ற குற்றம், எந்த தேசபக்தராலும் இதைச் செய்ய முடியாது.
ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அது பொறுப்புமிக்க பதவி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, வாஜ்பாய் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது, வெளிநாட்டில் இந்திய குழுவுக்கு வாஜ்பாய் தலைமை தாங்கி சென்றார். ஆனால், இந்தியாவை அவமதிப்பதை தவிர ராகுல்காந்தி வேறு எதையும் செய்வதில்லை. அவர் தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறார். அதனால் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்துள்ளார். தனது விரக்தியை வெளிநாட்டில் வெளிப்படுத்துகிறார்" என்று அவர் கூறினார்.