ஏக்நாத் தலைமையிலான சிவசேனா அணி எம்.எல்.ஏ. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மராட்டியத்தில் ஏக்நாத் தலைமையிலான சிவசேனா அணி எம்.எல்.ஏ. உதய் சமந்த் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு ஷிண்டே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-08-03 04:50 GMT



புனே,



மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி தலைமையிலான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி, சிவசேனாவில் இருந்து மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றனர்.

இதன்பின்னர், முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி விலகலை அடுத்து, பா.ஜ.க. கூட்டணியுடன் ஏக்நாத் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் ஆட்சி அமைத்தனர். முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்று கொண்டார். பா.ஜ.க.வின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராட்டியத்தின் துணை முதல்-மந்திரியாகி உள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே நேற்று பொது கூட்டமொன்றில் கலந்து கொண்டார். இந்த கூட்டம் நடைபெற்ற பகுதி வழியே ஏக்நாத் தலைமையிலான சிவசேனா அணியின் எம்.எல்.ஏ. உதய் சமந்த்தின் வாகனம் ஒன்று சென்றுள்ளது.

அதன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், அந்த வாகனத்தின் பின்புற கண்ணாடிகள் நொறுங்கின. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த சமந்த், மராட்டியத்தில் இதுபோன்ற அரசியல் நடைபெறுவது கிடையாது.

அவர்கள் (தாக்குதல் நடத்தியவர்கள்) கைகளில் பேஸ்பால் மட்டைகள் மற்றும் கற்களை வைத்திருந்தனர். எனக்கு முன்னால் முதல்-மந்திரியின் பாதுகாப்பு வாகனம் சென்றது. அவர்கள் என்னை தொடருகிறார்களா? அல்லது முதல்-மந்திரியை பின் தொடர்கின்றனரா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என கூறினார்.

இதுபோன்ற சம்பவங்களால் தன்னை அச்சுறுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுபற்றி முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிடமும் பேசியுள்ளேன். சம்பவம் பற்றி விளக்கினேன் என கூறியுள்ளார்.

இது கோழைத்தன செயல் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்ததுடன், மராட்டியத்தில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிக்கிறவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்