மம்தா பானர்ஜி பிரதமர் ஆக வேண்டும்: நடிகர் சத்ருகன் சின்கா எம்.பி. விருப்பம்
ஜனாதிபதி பதவியில் பெண் இருக்கும்நிலையில், பிரதமர் பதவியில் மம்தா பானர்ஜி அமர வேண்டும் என்று நடிகர் சத்ருகன் சின்கா விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பழம்பெரும் இந்தி நடிகர் சத்ருகன் சின்கா, நீண்ட காலமாக பா.ஜனதாவில் இருந்தார். 4 ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி, சிறிது காலம் காங்கிரசில் இருந்தார். பின்னர், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் ெதாகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
அவரிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு சத்ருகன் சின்கா கூறியதாவது:-
ஜனாதிபதி பதவியில் ஏற்கனவே ஒரு பெண் இருக்கும்நிலையில், பிரதமர் பதவியிலும் பெண் இருந்தால் நாட்டுக்கு மிக நன்றாக இருக்கும். மக்கள் ஆதரவும், அதிரடியும் நிறைந்த மம்தா பானர்ஜி போன்ற தலைவர், பிரதமர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார். அவரை அப்பதவியில் பார்க்க விரும்புகிறேன்.
திறமைசாலிகள்
அதே சமயத்தில், யார் பிரதமராக வேண்டும் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். 'இந்தியா' கூட்டணியில் திறமைசாலிகளுக்கு பஞ்சமே இல்லை.
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்காந்தி இருக்கிறார், நவீன கால சாணக்கியர் சரத்பவார் இருக்கிறார். அதிரடி தலைவர் மம்தா பானர்ஜி இருக்கிறார். ஆனால், பா.ஜனதாவில் பிரதமர் மோடியை தவிர, வேறு யாரும் இல்லை.
வாரிசு அரசியல்
எங்கள் கூட்டணியை ஆணவ கூட்டணி என்று சொல்வது பிரதமர் மோடி வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ஊழல், வாரிசு அரசியல் ஆகியவை பற்றி அவர் பேசுகிறார். வாரிசு அரசியலில் பா.ஜனதா, யாருக்கும் சளைத்தது அல்ல.
மராட்டிய மாநிலத்தில் பிரதமரால் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுடன் பா.ஜனதா கைகோர்த்துள்ளது. அதனால், ஊழல் குறித்த பா.ஜனதாவின் நிலைப்பாடு அம்பலமாகி விட்டது. பா.ஜனதா, தன்னைப்பற்றி கவலைப்பட வேண்டும்.
பறக்கும் முத்தம்
ராகுல்காந்தி 'பறக்கும் முத்தம்' கொடுத்ததாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார். சம்பவத்தின்போது நானும் அங்கு இருந்தேன். பறக்கும் முத்தம் கொடுக்கப்படவில்லை.
நடிப்பு தொழிலில் மூத்தவன் என்பதால், என்னை ஸ்மிரிதி இரானி பெரிதும் மதிப்பார். ஆனால் என்னை போன்று சினிமாவில் நடிக்காமல், டி.வி. தொடர்களுடன் நிறுத்திக்கொண்டார். முதிர்ச்சி அடைந்த ஸ்மிரிதி இரானி, ஏன் இப்படி குற்றம் சாட்டினார் என்று தெரியவில்லை. அவருக்கு என்ன நிர்பந்தமோ?
போட்டி
பிரதமர் ேமாடிக்கும், மத்திய உள்துைற மந்திரி அமித்ஷாவுக்கும் நாடாளுமன்றத்தில் யார் அதிக நேரம் பேசுவது என்று போட்டி போல் தெரிகிறது. அதனால், அமித்ஷாவை விட அதிக நேரம் பிரதமர் பேசி இருக்கிறார்.
பீகார் மாநிலம் தர்பங்காவில் புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டதாக பிரதமர் மோடி பொய் சொல்லி உள்ளார். பிரதமர் ஆகிவிட்டதாலே அவர் அறிஞர் ஆகிவிட மாட்டார்.
அவருக்கு யார் சொல்லிக் கொடுக்கின்றனர் என்று தெரியவில்லை. சொல்வதை சரியாக உள்வாங்கிக் கொள்கிறாரா என்றும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.