ஷாரிக்கிற்கு வெளிநாட்டு நபர் உள்பட 4 பேருடன் நெருங்கிய தொடர்பு

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பில் கைதான பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாட்டு நபர் உள்பட 4 பேருடன் நெருங்கிய தொடர்பு இருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2022-12-10 18:45 GMT

மங்களூரு:-

குக்கர் குண்டு வெடிப்பு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே கங்கனாடியை அடுத்த பம்ப்வெல் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் சதிவேலைக்காக குக்கர் குண்டை எடுத்து சென்ற சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தை சேர்ந்த ஷாரிக் என்கிற முகமது ஷாரிக் (வயது 24), ஆட்டோ டிரைவரான மங்களூருவை சேர்ந்த புருஷோத்தம் ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த ஷாரிக் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

ஷாரிக் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து வந்ததுடன், இந்தியாவில் பல பகுதிகளில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியதும், கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷாரிக், கோவை குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபினை கோவை மற்றும் கேரளாவில் சந்தித்து பேசியதும் விசாரணையில் தெரியவந்தது.

என்.ஐ.ஏ. விசாரணை

இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து கர்நாடக போலீசாரும் கோவை, மதுரை, நாகர்கோவில், கேரள மாநிலம் கொச்சி, ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில்

முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். அதன்படி மங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு, தமிழகம் மற்றும் கேரளாவிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் கேரளாவை சேர்ந்த 10 பேர் வெளிநாட்டிற்கு ெசன்று பயங்கரவாத அமைப்பில் சேர்ந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களது விவரங்களை தேசியபுலனாய்வு முகமை அதிகாரிகள் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

4 பேருக்கு தொடர்பு

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு 4 பேருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும், இவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அடிக்கடி சந்தித்ததும், நாடு முழுவதும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டதும், இதற்காக நிதி உதவி மற்றும் பொருள் உதவி பெற அவர்களை அவ்வப்போது ஷாரிக் சந்தித்து வந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

ஷாரிக்கை கேரளாவை சேர்ந்த 2 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர், வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் என 4 பேர் சந்தித்து பேசியுள்ளனர். 4 பேரின் பெயர், விவரங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் அதனை பகிரங்கப்படுத்த அவர்கள் மறுத்துவிட்டனர்.

மர்ம முடிச்சுகள் அவிழுமா?

இந்த நிலையில் அந்த 4 பேர்கள் தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள். இதனால் அவர்களின் உறவினர்கள், குடும்பத்தினரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், கர்நாடக போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் கோவை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு வழக்குகளில் மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்