மராட்டியத்தில் பாரத் ஜோடோ பாதயாத்திரையில் சரத்பவார் பங்கேற்க மாட்டார்- ஜெய்ராம் ரமேஷ் தகவல்
உடல்நலக்குறைவு காரணமாக சரத்பவார் பாரத் ஜோடோ பாதயாத்திரையில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மும்பை,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை கேரளா, கர்நாடகம்,தெலுங்கானா வழியாக மராட்டியத்துக்கு சென்றது. ராகுல்காந்தி தலைமையிலான இந்த பாதயாத்திரை தற்போது மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது.
மராட்டியத்தில் நடைபெறும் பாதயாத்திரையில் பங்கேற்க வருமாறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவார், உத்தவ் தாக்கரே போன்ற கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.
இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பாதயாத்திரையில் பங்கேற்க மாட்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:- சரத்பவார் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்த போது ராகுல் காந்தி அவரிடம் பேசினார்.
பாதயாத்திரையில் பங்கேற்க சரத்பவார் சம்மதித்திருந்தாலும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் அவரால் பங்கேற்க முடியவில்லை. சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே வெள்ளிக்கிழமை நடைபெறும் பாதயாத்திரையில் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.