நிதிஷ் குமாருக்கு பின்னடைவு; பா.ஜ.க.வில் இணைந்த ஜே.டி.யூ. டையூ டாமன் பஞ்சாயத்து உறுப்பினர்கள்

ஐக்கிய ஜனதா தளத்தின் டையூ டாமனுக்கான பிரிவில் இருந்து 15 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் பா.ஜ.க.வில் இணைந்தது நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-09-13 01:46 GMT



புதுடெல்லி,



பீகாரில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து கொண்டு, காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக கடந்த மாதம் நிதிஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார். துணை முதல்-மந்திரியாக ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்று கொண்டார்.

வருகிற பொது தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை தேசிய அளவில் உருவாக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் டெல்லி சென்றார். இது தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. தொடர்ந்து டெல்லியில் முகாமிட்ட அவர் ராகுல் காந்தி, சரத்பவார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும், முன்னாள் முதல்-மந்திரிகளையும் அடுத்தடுத்து சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில், அக்கட்சியில் இருந்து உறுப்பினர்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்து அவருக்கு பின்னடைவு ஏற்படுத்தி வருகின்றனர். இதுபற்றி பா.ஜ.க. வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஐக்கிய ஜனதா தளத்தின் டையூ டாமனுக்கான பிரிவில் உள்ள 15 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் ஒட்டு மொத்த பிரிவும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளன.

பா.ஜ.க.வில் இருந்து விலகுவது என நிதிஷ் குமார் முடிவு எடுத்து, பீகாரின் வளர்ச்சி பணிகளுக்கு தடை ஏற்படுத்தியதுடன், பாகுபலி, ஊழல் மற்றும் ஒரு வாரிசு கட்சியை தேர்ந்தெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

சமீபத்தில் அருணாசல பிரதேசத்தில் உள்ள ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் பலர் மற்றும் மணிப்பூரில் 7 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்